ஜெனீவாவில் நிறைவேற்றப்பட்ட இலங்கை தொடர்பான தீர்மானத்தை விரைவில் நடைமுறைப்படுத்த கோரும் வகையில், ஜெனீவாவில் புதிய பிரேரணை ஒன்று கொண்டுவரப்படவுள்ளது.
ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் அடுத்த அமர்வு எதிர்வரும் மார்ச் மாதம் ஆரம்பமாகவுள்ளது. இந்நிலையில், பிரித்தானியாவின் தலைமையில இப்பிரேரணை கொண்டுவரப்படவுள்ளது. ஜெனீவாவிலுள்ள ஐ.நா.விற்கான பிரித்தானிய தூதரகம் நேற்று (திங்கட்கிழமை) இந்த அறிவிப்பை விடுத்துள்ளது.
அமெரிக்காவின் இணை அனுசரணையில் ஏற்கனவே ஜெனீவாவில் கொண்டுவரப்பட்ட 30/1 பிரேரணையில் குறிப்பிடப்பட்ட பரிந்துரைகளை விரைவாக நடைமுறைப்படுத்தக் கோரும் வகையில் இந்த புதிய பிரேரணை கொண்டுவரப்படவுள்ளது.
அத்தோடு, நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமை விடயங்களை நிலைநாட்டுமாறு இப்பிரேரணையின் ஊடாக அழுத்தம் கொடுக்கப்படவுள்ளது.
பிரித்தானியாவுடன் இணைந்து கனடா, ஜேர்மனி மற்றும் மசிடோனியா ஆகிய நாடுகளும் பிரேரணைகளை முன்வைக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.