யாழ். போதனா வைத்தியசாலை தாதிய உத்தியோகத்தர்கள் இன்று அடையாள பணிப்புறக்கணிப்பு!!

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை கடமையாற்றும் தாதிய உத்தியோகத்தர்கள் இன்று காலை 7 மணி தொடக்கம் அடையாள பணிப்புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர் என வைத்தியசாலைப் பணிப்பாளருக்கு எழுத்துமூலம் அறிவித்துள்ளனர்.

மூன்று கோரிக்கைகளை முன்வைத்து அவர்கள் இந்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ளனர்.

விபத்து அவசர சிகிச்சைப் பிரிவில் கடமையாற்றிய தாதிய உத்தியோகத்தர்கள் இருவர் தொடர்பில் கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன என்று யாழ்ப்பாண போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் மருத்துவர் த.சத்தியமூர்த்தி தெரிவித்தார்.

அவரால் உறுதிப்படுத்தப்பட்ட சம்பவத்துடன் தாதிய உத்தியோகத்தர்கள் இருவர் மட்டுமே சம்பந்தப்பட்ட நிலையில் சில இணையத்தளங்கள் ஒட்டுமொத்த தாதிய உத்தியோகத்தர்களையும் இழிவுபடுத்தி அவர்கள் அனைவருமே இவ்வாறே செயற்படுகின்றனர் என்று செய்தியை திரிபுபடுத்தி வெளியிட்டிருந்தன.

அந்தச் செய்தியாள உளரீதியாகப் பாதிக்கப்பட்ட கடமை உணர்வுள்ள தாதியர்கள் தமது தொழிற்சங்கத்தின் ஊடாக வைத்தியசாலைப் பணிப்பாளரிடம் 3 கோரிக்கைகளை முன்வைத்து இன்று செவ்வாய்க்கிழமை அடையாள பணிப்புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.

தங்களால் வழங்கப்பட்டதாக வெளியிடப்பட்டதாக வந்துள்ள செய்தி முற்றிலும் தவறானது என வடமாகாணத்திலுள்ள அனைத்து ஊடகங்களிலும் வெளிவரவேண்டும்.

குறித்த இணையத்தளத்துக்கு எதிராக திணைக்களத்தலைவர் என்ற வகையில் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

தாதியர்கள் சம்பந்தமான பிரச்சினைகள் யாவும் தாதிய பரிசாதகர்கள் ஊடாக கட்டாயம் கலந்துரையாடப்படவேண்டும் ஆகிய மூன்று கோரிக்கைகளை முன்வைத்தே யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை அரச தாதி உத்தியோகத்தர் சங்கத்தின் தலைவரால் கையோப்பமிடப்பட்ட கடிதம் வைத்தியசாலைப் பணிப்பாளருக்கு அனுப்பப்பட்டுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது…

யாழ்ப்பாணம் போதான வைத்தியசாலை அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் கடமையாற்றிய தாதிய உத்தியோகத்தர்கள் இருவர் தகாத உறவில் ஈடுபட்டனர் என்பது தொடர்பில் தங்களுக்கு முறைப்பாடு வழங்கப்பட்டுள்ளது. அதுதொடர்பில் தங்களின் நடவடிக்கை என்ன? என்று யாழ்பாணம் போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் மருத்துவர் த.சத்தியமூர்த்தியிடம் செய்தியாளர் கேள்வியெழுப்பியிருந்தார்.

“அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் இல்லை விபத்து அவசர சிகிச்சை பிரிவில் கடமையாற்றும் தாதிய உத்தியோகத்தர்கள் இருவருக்கு எதிராகவே முறைப்பாடுகள் கிடைத்தன. அதுதொடர்பில் விசாரணைகள் இடம்பெறுகின்றன. அதுதொடர்பான மேலதிக நடவடிக்கையை சுகாதார அமைச்சுதான் எடுக்கும்” என்று வைத்தியசாலைப் பணிப்பாளர் பதிலளித்தார்.

இவ்வாறு இடம்பெறுகின்ற சம்பவங்களை மூடி மறைப்பதற்தால் அல்லது ஊடகங்கள் புறந்தள்ளுவதால் குற்றங்கள் அதிகரிக்கும்.

இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய ஆண் தாதிய உத்தியோகத்தர் கடமையை துஷ்பிரயோகம் செய்வது இது முதன்முறையில்லை. தற்போதும் வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது என்ற செய்தி வெளியிடப்பட்ட போது அந்த தாதிய உத்தியோகத்தர் முந்தியடித்துக் கொண்டு வந்து தான் அன்று இரவு கடமையில் ஈடுபடவில்லை என பிரசித்தம் செய்கிறார்.

எனவே கடமை உணர்வை தட்டிக்கழித்துவிட்டு இவ்வாறான கீழ்த்தரமான பணிகளில் ஈடுபடுவோர் தண்டிக்கப்பட நடவடிக்கை எடுப்பது ஒவ்வொரு தொழிற்சங்கத்தின் கடமையாகும். ஆசிரியர் ஒருவர் தவறிழைத்தால் சக ஆசிரியர்களே எதிர்த்து நிற்கும் நிலையே காணப்படுகின்றது.

பாடசாலைகளில் இடம்பெற்ற ஆசிரியர்கள் சிலரின் தவறுகளுக்கு சக ஆசிரியர்களே எதிராக சாட்சியமளித்து தண்டனையும் பெற்றுக்கொடுக்கின்றனர் என்பது கண்கூடு.

எனவே ஒட்டுமொத்த தாதிய உத்தியோகத்தர்களையும் இழிவுபடுத்தும் வகையில் செய்தி வெளியிடுவது தர்ம்மில்லை. யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் கடமையாற்றும் தாதிய உத்தியோகத்தர்கள் பலர் அர்ப்பணிப்புடன் செயற்படுகின்றனர் என்பது அவர்களிடம் சேவையைப் பெறுவோர் அறிந்திருப்பர்.

இந்த தொழிற்சங்க போராட்டத்தின் ஊடாக உண்மையை மறைக்க முயலாது தங்கள் அனைவருக்கும் எதிராக பரப்பட்ட அவதூறுக்கு எதிராக குரல் கொடுங்கள் என்பதே அனைவரது எதிர்பார்ப்பாகும்.

Related Posts