வடமாகாண கல்வித்துறையில் மர்மங்கள் நீடிக்கின்றன. பணிப்பாளர்கள் இல்லை!! அதிபர்கள் இல்லை!! ஆசிரியர்கள் இல்லை!! இதுவே இன்றைய வடமாகாண கல்வியின் நிலை என்று கவலை வெளியிட்டுள்ளது இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம்.
இதுதொடர்பில் சங்கம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
வடக்கு மாகாணத்தில் உள்ள பிரதானமான யாழ்ப்பாணம் கல்வி வலயத்தின் வலயக்கல்விப் பணிப்பாளர் வெற்றிடம் ஒரு வருடத்தை நெருங்குகின்றது. இந்த வலயத்திற்கு பணிப்பாளரை நியமனம் செய்யாமல் இழுத்தடிப்பதில் மர்மம் இருப்பதாகத் தெரிகின்றது.
இது இவ்வாறு இருக்க வடக்கு மாகாணக் கல்வித் திணைக்களத்தில் மேலதிக மாகாணக் கல்விப் பணிப்பாளர்கள் இருவர் இன்னும் நியிமிக்கப்படவில்லை. வடபுலத்துக் கல்வியை வழிப்படுத்துகின்ற வடக்கு மாகாணக் கல்வித் திணைக்களத்தில் இவ்வாறு பொறுப்பு வாய்ந்த மேலதிக பணிப்பாளர்கள் இல்லாதிருப்பது பெரும் பின்னடைவாகும்.
இந்த வெற்றிடம் நீண்டநாள்களாக நீடிக்கின்றது. இதற்குப் பொருத்தமானவர்கள் வடக்கு மாகாணத்தில் இல்லையென்றால் பிற மாகாணங்களில் இருந்தாவது நியமிக்க வேண்டும். இவ்விடங்கள் பல தடவைகள் பலராலும் சுட்டிக்காட்டப்பட்டும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
அண்மையில் வடபுலத்துக் கல்வியில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தப்போதாக வடக்கு மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் தெரிவித்திருந்தார். இத்தகைய மாகாணக் கல்வித் திணைக்களத்தின் பணிப்பாளர்கள் வெற்றிடம், வலயக்கல்விப் பணிப்பாளர்கள் வெற்றிடம் என்பன ஆளுநரின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளதா? என்ற கேள்வியும் இங்கு எழுகின்றது.
யாழ்ப்பாணக் கல்வி வலயத்தின் பணிப்பாளர் நியமனம் தொடர்பில் பல தடவைகள் நாம் வலியுறுத்தியும், பல தடவைகள் வாக்குறுதிகள் வழங்கியும் இன்னும் நியமனம் நடைபெறாமல் இருப்பது பலத்த சந்தேகத்தைத் தோற்றுவித்துள்ளது.
இவ்விடங்களில் ஆளுநர் தலையீடு செய்து உடனடியாக நியமனங்களை வழங்க வேண்டுமென்று கேட்டுக்கொள்கின்றோம்- என்றுள்ளது.