வலி.வடக்கில் இராணுவக் கட்டுப்பாட்டுக்குள் இருந்து விடுவிக்கப்பட்ட வீடுகளில் சிங்கள மன்னர்களைக் குறிக்கும் சிற்பங்கள் பல காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
யாழ். வலி.வடக்கில் 45 ஏக்கர் காணி இராணுவக் கட்டுப்பாட்டுக்குள் இருந்து தையிட்டி தெற்கில் 30 ஏக்கர் காணியும், ஒட்டகபுலத்தில் 15 ஏக்கர் காணியும் விடுவிக்கப்பட்டன.
எனினும் குறித்த காணிகள் நேற்று முன்தினம் விடுவிக்கப்பட்ட போதும் நேற்று காலையே காணி உரிமையாளர்களைப் பார்வையிட அனுமதிக்கப்பட்டது.
தையிட்டி தெற்கில் j/249, j/250 ஆகிய கிராம சேவகர் பிரிவுகளில் விடுவிக்கப்பட்ட காணிகளில் உள்ள அனேகமான வீடுகள் இராணுவத்தினர் பயன்படுத்தியதால் நல்ல நிலையிலேயே உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன், சில வீடுகளைத் திருத்தி மாற்றியுள்ளனர். மேலும் அங்குள்ள வீடு ஒன்றைத் தமது அலுவலகமாக மாற்றியுள்ளதுடன் சுவரில் சிங்கள மன்னர்களின் வரலாற்றுப் படங்களைப் புடைப்புச் சிற்பங்களாக அமைத்துள்ளனர்.
மேலும் குறித்த காணியில் நன்கு வளர்ந்த அரச மரத்தில் புத்தர்சிலை வைத்து வணங்கியுள்ளனர். எனினும் இராணுவத்தினர் அங்கிருந்து வெளியேறும்போது குறித்த புத்தர் சிலையை அங்கிருந்து எடுத்துச் சென்றுள்ளனர்.
மேலும் குறித்த காணியில் கூடைப்பந்தாட்ட மைதானம் ஒன்றும் இராணுவத்தினரால் அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.