யாழ்ப்பாணத்தில் இராணுவம் கையகப்படுத்தியுள்ள காணிகள் நேற்று விடுவிக்கப்படுமென ஜனாதிபதி அறிவித்த போதும் இராணுவம் மக்களை குறித்த காணிகளுக்குள் செல்ல அனுமதிக்கவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் நேற்று (திங்கட்கிழமை) தமது காணிகளுக்குச் செல்ல வந்த காணி உரிமையாளர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றுள்ளனர்.
வடக்கில் 1000 ஏக்கரிற்கும் மேற்பட்ட காணிகளை நேற்றையதினம் மீள மக்களிடம் கையளிப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முல்லைத்தீவில் வைத்து தெரிவித்திருந்தார்.
இதன்படி யாழ்.வலி வடக்கில் 45 ஏக்கர் காணி விடுவிப்பதாக தெரிவிக்கப்பட்டது. குறிப்பாக தையிட்டி தெற்கில் 30 ஏக்கர் காணிகளும், ஓட்டகப்புலத்தில் 15 ஏக்கர் காணிகளும் விடுவிப்பதாக தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து நேற்று காலை குறித்த காணிகளின் உரிமையாளர்கள் தமது காணிகளை பார்ப்பதற்கு சென்றிருந்தனர். எனினும் எவரையும் இராணுவம் அவர்களது காணிக்குள் செல்ல அனுமதித்திருக்கவில்லை.
சுமார் மாலை 04 மணிவரை மக்கள் காத்திருந்த நிலையில், குறித்த காணிகள் இன்றைய தினமே விடுவிக்கப்படும் எனவும் அதன் பின்னரே மக்கள் காணிகளுக்குள் செல்ல முடியும் எனவும் இராணுவத்தினர் தெரிவித்தனர்.
இதனையடுத்து காலையில் இருந்து காத்திருந்த மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.