கோப்பாய் பொலிஸில் தனக்கு செல்வாக்கு உள்ளது என தெனாவட்டாகப் பேசிய இளைஞனை கடமைக்கு இடையூறு விளைவித்த குற்றசாட்டில் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
உரும்பிராய் சந்தி பகுதியில் கோப்பாய் பொலிஸ் நிலையத்தின் போக்குவரத்து பிரிவு பொலிஸார் நேற்று வியாழக்கிழமை இரவு கடமையில் நின்றுள்ளார்கள்.
அதன் போது உரும்பிராய் சந்தியில் உள்ள உணவகத்தில் உணவு வாங்குவதற்கு இளைஞர் ஒருவர் தலைக்கவசம் இன்றி மோட்டார் சைக்கிளைச் செலுத்தி வந்துள்ளார். அந்த இளைஞனை கடமையில் இருந்த பொலிஸார் மறித்து தலைக்கவசம் இன்றி மோட்டார் சைக்கிளில் பயணித்தமைக்கு தண்டம் எழுத முற்பட்டுஉள்ளனர்.
அதன் போது அந்த இளைஞன், “எனக்கு கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் செல்வாக்கு உள்ளது. என்னைப் பற்றி கேட்டால் அங்குள்ள பொலிஸார் கூறுவார்கள். நீங்கள் புதிதாக கடமைக்கு வந்துள்ளதால் என்னை பற்றி தெரியாது தண்டம் எழுத முனைகின்றீர்கள்” என கடமையில் நின்ற பொலிஸார் இருவரிடமும் தெனாவட்டாகப் பேசியுள்ளார்.
பொலிஸாருக்கும் இளைஞனுக்கும் இடையில் அதனால் முரண்பாடு ஏற்பட்டதை அடுத்து அவ்விடத்தில் பொதுமக்கள் கூடினார்கள் அதனால் அங்கு கடமையில் நின்ற பொலிஸார் மேலதிக பொலிஸாரை வரவழைத்து , இளைஞனை கைது செய்ததுடன் அவரது மோட்டார் சைக்கிளையும் கைப்பற்றி பொலிஸ் நிலையம் கொண்டு சென்றனர்.
பொலிஸ் நிலையத்தில் தனக்கு செல்வாக்கு உள்ளதாக கூறியும் இளைஞனுக்கு எதிராக நடவடிக்கை எடுத்த இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்களையும் அங்கிருந்த மக்கள் வெகுவாக பாராட்டினார்கள்.