அடுத்தடுத்த ஆண்டில் இந்த விளக்கீட்டுத்தினத்தில் மாவீரர்தினம் அமையாது. வேறு ஒரு தினத்தில் அமையப்போவது நிச்சயம். அந்த நேரத்தில் தனது வீட்டில் இந்தப் பாராளுமன்ற உறுப்பினர்கள் இந் நிகழ்வை இதய சுத்தியுடன் அனுஷ்டிப்பார்களா? என யாழ் மாநகரசபை எதிர்க்கட்சித்தலைவர் மு.றெமிடியஸ் கேள்வி எழுப்பியுள்ளார். யாழ் மாநகரசபையில் தமிழ் தேசிய கூட்டமைப்பினால் சமர்ப்பிக்கப்பட்ட கண்டனப் பிரேரணை மீது எதிர்க்கட்சித்தலைவர் மு.றெமிடியஸ் ஆற்றிய உரை வருமாறு.
இன்றைய சூழலை அவதானிக்கும் போது 1970 ஆம் ஆண்டு இறுதியிலும் 1980 ஆம் ஆண்டுகளின் ஆரம்பத்திலும் அரசியல் வாதிகளின் உணர்ச்சி பூர்வமான பேச்சுக்களை கேட்டு பல்கலைக்கழகத்தில் இவ்வாறான போராட்டங்களை வெடிக்க ஆரம்பித்தது மட்டுமல்ல இளைஞர்களையும் ஆயுதம் ஏந்தி போராட வைத்து பல ஆயிரக்கணக்கான இளைஞர்கள் இறப்பதற்கு வழிவகுத்து விட்டு இவர்கள் தங்களது பிள்ளைகளை வெளிநாட்டிற்கு அனுப்பி சுகபோக வாழ்க்கை வாழ வைத்தார்கள்;
ஆனால் வடக்கு கிழக்கில் ஏழை எளியவர்கள் வறியவர்கள் கிராமத்தவர்கள் ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டு தங்கள் உயிர்களை தியாகம் செய்தார்கள். இதே மாதிரியான நிலையை மீண்டும் அரசியல் வாதிகள் தங்கள் உணர்ச்சிபூர்வமான பேச்சு மூலம் பல்கலைக்கழக மாணவர்களை தூண்டி ஒரு வன்முறை கலாசாரத்தை உருவாக்கி இளைஞர்களை பலிகொடுக்க முயற்சி செய்கின்றார்கள். இவ் அரசியல் வாதிகளின் குடும்பங்களும் பிள்ளைகளும் யாழ்ப்பாணத்திலோ வடமாகாணத்திலோ இல்லை என்பது முக்கியமான விடயம் .
தற்போது இராணுவம் யாழ்ப்பாணத்தை விட்டு வெளியேறி வருகின்ற இந்த வேளையில் இவ்வாறான செயற்பாடுகளும் உணர்ச்சி மிக்க பேச்சுக்களும் யாழ்ப்பாணத்தில் இராணுவம் தொடர்ந்தும் இருக்க வேண்டும் என்ற விடயத்தை அரசுக்கு ஞாபகப்படுத்துவதற்கு ஆதாரமாக இருக்கப் போகின்றது.இராணுவத்தினரோ அல்லது வேறு யாராக இருந்தாலும் சரி வன்முறைகள் என்பது ஏற்றுக்கொள்ள முடியாத விடயம்.
இவ்வாறான வன்முறைகளை தூண்டி இத்தகைய செயற்பாடுகளுக்கு நாங்கள் ஆதரவாக செயற்படுவோமாக இருந்தால் எமது சமூக நிலை சீர் குலைந்து மீண்டும் அவசர கால சட்டத்தை அரசு உருவாக்குவதற்கு நாங்களாகவே வழிவகுத்து கொடுக்கின்றோம். சர்வதேச மட்டத்தில் இவர்களது பத்திரிகை படங்களை தனக்கு சார்பாக பயன்படுத்தி தனது நிலைப்பாட்டை அதாவது இராணுவம் இருக்க வேண்டிய தேவையை நியாயப்படுத்துவதற்கு நாங்களாகவே உதவி செய்கின்றௌம்.
இந்துக்களின் விசேட தினங்களுக்கு இடையூறுகள் ஏற்படுத்தப்படும் என்ற செய்தி இரண்டு வாரத்திற்கு முன்பே வெளிப்படையாக தென்பட்ட ஒரு விடயம் எமது தமிழ் அரசியல் வாதிகள் இலங்கை ஐனாதிபதியுடனோ பாதுகாப்பு அமைச்சுடனோ உயர் அதிகாரிகளுடனோ தொடர்பு கொண்டு எமது புனித நாளை கொண்டாடுவதற்கு அனுமதி அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைக்காதது ஒரு துரதிஷ்டவசமான விடயம்.
மாறாக மாவீரர் தினம் கொண்டாடப்பட வேண்டும் என்ற கோரிக்கையையே ஒரு சில ஏகப் பிரதிநிதிகள் முன்வைத்தார்கள். இந்தக் கோரிக்கையால் தமிழர்கள் தமது புனிதநாளை அனுஷ்டிக்க முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டார்கள். நான் மாவீரர்தினம் கொண்டாடக்கூடாது என்று கூறவில்லை. இங்கு அறிக்கைவிட்ட பாராளுமன்ற உறுப்பினர் தனது வீட்டிலோ அல்லது காரியாலயத்திலோ ஓர் ஈகைச்சுடர் கூட ஏற்றினாரா என்பதைச் சிந்திக்க வேண்டும். அல்லது அடுத்தடுத்த ஆண்டில் இந்த விளக்கீட்டுத்தினத்தில் மாவீரர்தினம் அமையாது. வேறு ஒரு தினத்தில் அமையப்போவது நிச்சயம். அந்த நேரத்தில் தனது வீட்டில் இந்தப் பாராளுமன்ற உறுப்பினர்கள் இந் நிகழ்வை இதய சுத்தியுடன் அனுஷ்டிப்பார்களா?
இதே பல்கலைக்கழக மாணவHகள் 2009 ஆம் ஆண்டு மாநகரசபை தேர்தலின் போது கௌரவ அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை தோளில் தூக்கிச்சென்றார்கள். 2010 ஆம் ஆண்டு பல்கலைக்கழகத்திலிருந்து வெளியேறிய மாணவர்கள் தமக்கு வேலை வேண்டும் என்பதற்காக தேர்தலில் வெற்றிலைச் சின்னத்திற்கு வீடுவீடாகச் சென்று பிரச்சாரம் செய்தார்கள். இவையெல்லாம் உண்மைச்சம்பவங்கள்.
எனவே கடந்த கால அனுபவங்களைக் கருத்தில் எடுத்து தேவையற்ற விதத்தில் உணர்ச்சியைத் தூண்டி மக்களது இயல்பான நிம்மதியான வாழ்கைக்கு இடையூறு ஏற்படாத வகையில் செயற்பட வேண்டும். தமிழ் அரசியல் வாதிகளில் எந்தவொரு அரசியல்வாதியாவது கடந்தகாலப் போராட்டத்தில் ஈடுபட்டு சிறைச்சாலையில் இருப்பவர்களுக்கு உதவி இருக்கின்றார்களா? இல்லை ஒரு ஆயிரம் ரூபா செலவழித்து ஒரு சட்டத்தரணியை நியமித்து அவர்களை விடுதலை செய்ததார்களா?
எனவே இவ்வாறான செயற்பாடுகளுக்கு ஆதரவாகக் கொண்டு வரும் எந்த ஒரு தீர்மானத்தையும் நான் தனிப்பட்ட முறையில் ஆதரிக்கமாட்டேன் இவ்வாறு தெரிவித்து ஆப்பு வைத்தார் றெமீடியஸ்.
இதனை ‘சேம் சைட் கோல்’ என ஊடகங்கள் கிண்டலடித்துள்ளன.மாணவர்களுக்கெதிரான தாக்குதல் குறித்து கண்டணம் தெரிவிக்காமல் தனது தலைமை மீதான அரசியல் காழ்ப்புணர்வினை கொட்டித்தீர்த்திருப்பதாகவும் தமிழ்த்தேசிக்கூட்டமைப்பின் அரசியல் செயற்பாடுகளுக்கும் மாணவர்களின் போராட்டத்திற்கும் முடிச்சுப்போடும் வகையில் பேசியிருப்பதாகவும் அரசியல் அவதானிகள் கருத்து தெரிவிக்கின்றனர்.மக்களின் உணர்ச்சிகளை துாண்டும் பேச்சுகளின் மூலமும் கூட்டமைப்பின் கொள்கைகளுக்காகவும் கிடைத்தவாக்குக்களின் மூலமும் தான் உறுப்பினர் பதவியினை அவர் பெற்றிருக்கிறார் என்பதை மறந்துவிட்டு பேசியிருப்பதாக கூட்டமைப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன!.
விரைவில் அவர் உறுப்பினர்கதவியில் இருந்து நீக்குவதற்கான நடவடிக்கையில் கூட்டமைப்பினதலைமை ஈடுபட்டிருப்பதாக அந்த வட்டாரங்கள் மேலும் தெரிவித்துள்ளன.