கொழும்பு அரசின் 2006ஆம் ஆண்டு சுற்றறிக்கைக்கு அமையவே, நோயாளர் பகுதியில் கமரா வசதியுடைய நவீன அலைபேசிகள் பயன்படுத்த முடியாது என்பதனை நடைமுறைப்படுத்துகின்றோம் என்று யாழ்ப்பாணப் போதனா மருத்துவமனைப் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்தார்.
அங்கு பணியாற்றும் மருத்துவர்கள், தாதியர்கள் மற்றும் ஊழியர்கள் கடமைநேரத்தில் நவீனவகை அலைபேசி களைப் பயன்படுத்தத் தடை விதிக்கப்பட்டுள்ளமை தொடர்பில், நேற்றைய செய்தியாளர் சந்திப்பில் கேட்டபோது அவர் மேலும் தெரிவித்ததாவது:
“மருத்துவமனையில் பணியாற்றும் பணிப்பாளரான நான் உட்பட சகலரும் நோயாளர்களின் தேவையைப் பூர்த்தி செய்யவே நியமிக்கப்பட்டுள்ளோம். நோயாளர் விடுதிகளில் நான் உட்பட எவருமே நவீனவகை அலைபேசிகளைப் பயன்படுத்த முடியாது. சுற்றறிக்கைப்படியே அது நடைமுறைப்படுத்தப்படுகிறது. நாங்கள் மட்டுமன்றி நோயாளர்களுடன் தொடர்புடைய எவருமே பயன்படுத்த முடியாது என்றுதான் கூறியுள்ளோம். இதில் எந்தவித பாகுபாடும் கிடையாது” – – என்றார்.