கிளிநொச்சி இராணுவ தலைமையகத்தின் கட்டுப்பாட்டிலிருந்த 45 ஏக்கர் காணிகள் அரசாங்க அதிபர்களிடம் இன்று (புதன்கிழமை) கையளிக்கப்பட்டுள்ளன.
குறித்த நிகழ்வு இன்று காலை 10 மணியளவில் கிளிநாச்சி நகரிலுள்ள காமினி சென்டர் மண்டபத்தில் இடம்பெற்றது. இதன்போதே கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் படையினர் வசமிருந்த 45 ஏக்கர் காணிகள் இவ்வாறு கையளிக்கப்பட்டுள்ளன.
கிளிநொச்சி மாவட்டத்தின் கரைச்சி- கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுகளிலும், முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு- துணுக்காய் பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் உள்ள தனியார் காணிகளே இவ்வாறு படையினரால் விடுவிக்கப்பட்டுள்ளதாக அரசாங்க அதிபர்கள் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளனர்.
கிளிநொச்சி மாவட்டத்தில் அண்ணளவாக 40 ஏக்கர் காணிகளும், முல்லைத்தீவு மாவட்டத்தில் அண்ணளவாக 5 ஏக்கர் காணிகளும் படையினரால் இன்று விடுவிக்கப்பட்டு தம்மிடம் கையளித்துள்ளதாகவும், பிரதேச செயலளர்கள் ஊடாக காணிகள் அடையாளம் காணப்பட்டு மக்களிடம் கையளிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் அவர்கள் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.