யாழ்ப்பாணக் குடாநாட்டில் வாள்வெட்டு வன்முறை மற்றும் கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட 11 சந்தேகநபர்களையும் வரும் 14 நாள்களுக்கு விளக்கமறியலில் வைக்க மல்லாகம் நீதிவான் ஏ.ஏ.ஆனந்தராசா உத்தரவிட்டார்.
யாழ்ப்பாணத்தில் அண்மைக்காலமாக பெற்றோல் குண்டுத் தாக்குதல் சம்பவங்கள் அதிகரித்து வந்தன. அத்துடன், சுன்னாகம் பொலிஸ் நிலையம் மாற்றப்படவுள்ள வளாகத்துக்கும் கடந்த வாரம் பெற்றோல் குண்டுத் தாக்குதல் நடத்தபட்டது.
இந்த நிலையில் வன்முறைக் கும்பல்களைத் தேடும் நடவடிக்கையை நேற்று முன்தினம் திங்கட்கிழமை இரவு தொடக்கம் நேற்று அதிகாலைவரை பொலிஸார் முன்னெடுத்திருந்தனர். இதன்போது 11 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து ஹைஏஸ் வான், மோட்டார் சைக்கிள்கள் இரண்டு மற்றும் 6 வாள்கள் என்பன மீட்கப்பட்டன.
கைது செய்யப்பட்ட அனைவரும் 20 மற்றும் 21 வயதுடையவர்கள். அரியாலை, மானிப்பாய், யாழ்ப்பாணம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்று பொலிஸார் கூறியிருந்தனர்.
புன்னாலைக்கட்டுவனில் வீடுபுகுந்து மிரட்டி பணம் பறித்துச் சென்றமை, அரியாலையில் வங்கி முகாமையாளரின் வீடு மீது நடத்தப்பட்ட தாக்குதல், நெல்லியடியில் வாள்வெட்டு வன்முறையில் ஈடுபட்டமை, பெற்றோல் குண்டுத் தாக்குதல்கள் உள்ளிட்ட கொள்ளை மற்றும் வன்முறைச் சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் என்ற குற்றச்சாட்டுக்கள் சந்தேகநபர்கள் மீது பாய்ந்தன.
சந்தேகநபர்கள் 11 பேரும் மல்லாகம் நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் நேற்று மாலை முற்படுத்தப்பட்டனர். அவர்கள் சார்பில் சட்டத்தரணிகள் அணி முன்னிலையாகின. சந்தேகநபர்களுக்கு பிணை வழங்கக் கோரி சட்டத்தரணிகள் விண்ணப்பம் செய்தனர்.
எனினும் சந்தேகநபர்களுக்கு பிணை வழங்க பொலிஸார் ஆட்சேபனை தெரிவித்தனர். இருதரப்பு சமர்ப்பணங்களையும் ஆராய்ந்த நீதிவான், சந்தேகநபர்களை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.
சந்தேகநபர்களின் உறவினர்கள் மல்லாகம் நீதிமன்ற வளாகத்துக்குள் திரண்டிருந்தமையை அவதானிக்க முடிந்தது.