உலக உடற்கட்டழகர் மற்றும் உடலமைப்பு விளையாட்டு சம்மேளனத்தின் 10ஆவது உடற்கட்டழகர் போட்டியில் 100 கிலோ கிராமுக்கு மேற்பட்டோர் பிரிவில் தெற்காசியாவின் கறுப்பு சிங்கம் என வர்ணிக்கப்படுகின்ற தேசிய உடற்கட்டழகர் சம்பியனான இலங்கைத் தமிழர் லூசியன் புஷ்பராஜ் வெற்றி பெற்றுள்ளார்.
தாய்லாந்தில் இடம்பெற்ற 10 ஆவது உடற்கட்டழகர் மற்றும் உடலமைப்பு விளையாட்டு போட்டியிலேயே லூசியன் வெற்றி பெற்றுள்ளார்.
இறுதியாக கடந்த வருடம் ஓகஸ்ட் மாதம் தென்கொரியாவின் தலைநகர் சோலில் (Seoul) நடைபெற்ற ஆசிய உடற்கட்டழகர் போட்டித் தொடரில் இலங்கைக்கான முதலாவது சம்பியன் பட்டத்தை வென்று கொடுத்த லூசியன் புஷ்பராஜ், 2017ஆம் ஆண்டின் ஆசியாவின் உடற்கட்டழகராகவும் தெரிவாகினார்.
குவைத் நாட்டில் உள்ள உடற்பயிற்சியகம் ஒன்றில் பயிற்சியாளராகக் கடமையாற்றுகின்ற லூசியன், 2013ஆம் ஆண்டு கோல்டன் சிறிலங்கா உடற்கட்டழகராகவும், அதே ஆண்டு 100 கிலோ கிராமிற்கு அதிகமான எடைப்பிரிவில் இலங்கையின் உடற்கட்டழகராகவும் தெரிவானார்.
2006ஆம் ஆண்டு குவைத்தில் நடைபெற்ற உடற்கட்டழகர் போட்டித் தொடரில் வெண்கலப் பதக்கத்தை வென்ற அவர், 2014ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசிய உடற்கட்டழகர் போட்டியில் வெள்ளிப் பதக்கத்தையும் வென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
2014ஆம் ஆண்டு இலங்கையின் ஆணழகன் பட்டத்தை வென்றதைத் தொடர்ந்து இவர் பல சர்வதேச போட்டிகளில் கலந்து கொண்டு வருகின்றனர்.