ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக மனநலக் கோளாறு மனுவொன்றை தாக்கல் செய்யுமாறு பொலிஸ் மா அதிபருக்கு கட்டளையிடுமாறு கோரி மேன்முறையீட்டு நீதிமன்றில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இலங்கை வரலாற்றில் முதல் தடவையாக ஜனாதிபதி ஒருவருக்கு மனநலக் கோளாறு உண்டு என்பதை ஆராயுமாறு நீதித் துறையை நாடப்பட்டுள்ளது.
மன நலக்கோளாறு கட்டளைச் சட்டத்தின் 2ஆம் அத்தியாயத்துக்கு அமைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் மனநிலை ஆரோக்கியமான நிலையில் உள்ளதாக என்பது தொடர்பில் கண்டறிய மாவட்ட நீதிமன்றில் வழக்கொன்றினை ஆரம்பித்து தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு பொலிஸ் மா அதிபருக்கு மேற்செல் எனும் நீதிப்பேராணை (மென்டாமுஸ் ரிட்) கட்டளையிடுமாறு மனுதாரர் கோரியுள்ளார்.
மாவட்ட நீதிமன்றின் கட்டளைக்கு அமைவாக அங்கோடை மனநல ஆய்வகத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பரிசோதனைக்குட்படுத்தப்படவேண்டும் என்றும் மனுதாரர் கோரியுள்ளார்.
சிவில் செயற்பாட்டாளரான தக்சிலா ஜயவர்தனவின் ஆலோசனையின் பேரில், சட்டத்தரணி சிசிர குமார சிறிவர்தன இந்த மனுவை இன்று திங்கட்கிழமை மேன்முறையீட்டு நீதிமன்றில் தாக்கல் செய்தார்.
பொலிஸ் மா அதிபருடன் கோட்டை தலைமையகப் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியும் எதிர் மனுதாரராகக் குறிப்பிடப்பட்டுள்ளார். .
அரசியலமைப்பின் பிரகாரம் மனநிலைக் கோளாறு உள்ள ஒருவர் ஜனாதிபதிப் பதவியில் நீடிக்க முடியாது. ஜனாதிபதிக்கு மனப் பலவீனம் அல்லது உடற்பலவீனம் உள்ளவராக உள்ளதால் அவரால் பணிகளைச் சரியாகச் செய்ய முடியவில்லை என சபாநாயகருக்கு நாடாளுமன்ற உறுப்பினர் எவராவது அனுப்பிவைத்தால், நாடாளுமன்றின் மூன்றில் இரண்டு பெரும்பான்மை அல்லது அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களில் அரைவாசிப் பேரின் கையொப்பதுடன் பிரதம நீதியரசரிடம் ஆலோசனையைப் பெற்று சபாநாயகர் அவரை பதவி நீக்க முடியும்.
இந்த நிலையில் முதன்முறையாக ஜனாதிபதியின் மனநலக் கோளாறு தொடர்பில் மேன்முறையீட்டு நீதிமன்றில் மேற்செல் எனும் நீதிப்பேராணை மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
பொதுநலவாய நாடுகள் வரலாற்றில் மேற்செல் அல்லது யாதுரை நீதிப் பேராணை மனு இலங்கையில் அதிகளவு தற்போது பயன்படுத்தப்படுவதாக மூத்த சட்டவாளர் அசங்க வெலிகல தெரிவித்துள்ளார்.