யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெறும் நோயாளர்களின் எண்ணிக்கை நாளாந்தம் அதிகரித்து வருவதால் சென். ஜோன்ஸ் அம்புலன்ஸுடன் இணைந்து வைத்தியசாலையில் கடமையாற்றும் தொண்டர்களுக்கு ஆளணிப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது என்று சென். ஜோன்ஸ் அம்புலன்ஸின் யாழ்.மாவட்ட ஆணையாளர் செ.செல்வரஞ்சன் தெரித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்ததாவது:
யாழ். போதனா வைத்தியசாலைக்கு தற்போது அதிக எண்ணிக்கையான நோயாளர்கள் சிகிச்சைக்காக வருகை தருகின்றனர். விடுதிகளில் தங்கி சிகிச்சையும் பெற்று வருகின்றனர். இதன் காரணமாக நோயாளர்களுக்கு வேண்டிய முதலுதவிகளை செய்வதற்கு போதுமான ஆளணி எம்மிடம் இல்லை.
தற்போது கடமையில் இருக்கும் தொண்டர்கள் விடுதிகள் மற்றும் கிளினிக் பிரிவுகளில் கடமைக்கு அமர்த்தப்பட்டுள்ளனர். எனினும் தற்போது வைத்தியசாலையில் திடீர் நோய்கள், தொற்று நோய்கள், விபத்து போன்ற காரணங்களால் அதிக எண்ணிக்கையினர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட வண்ணம் உள்ளனர்.
இந்த நிலையில் இருக்கக் கூடிய ஆளணிகளைக் கொண்டு உரிய சேவையை நோயாளிகளுக்கு வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே சென்.ஜோன்ஸ் அம்புலன்ஸுடன் இணைந்து தொண்டர்களாகக் கடமையாற்ற தகுதியுடையவர்கள் முதலுதவி செய்யக்கூடிய ஆர்வமுடையவராகவும் க.பொ.த சாதாரண தரத்தில் சித்தியடைந்தவராகவும் இருத்தல் வேண்டும்.
ஆண், பெண் இருபாலரும் தொண்டர்களாக சேவைக்கு இணைத்துக் கொள்ளப்படுவார்கள். ஆர்வமுடையவர்கள் யாழ்.போதனா வைத்தியசாலையின் சென்.ஜோன்ஸ் அம்புலன்ஸ் காரியாலயத்துடன் தொடர்பு கொண்டு மேலதிக விவரங்களைப் பெற்றுக் கொள்ளலாம் என்று மேலும் தெரிவித்தார்.