கிளிநொச்சி இரணைமடுக் குளத்தின் வான் பாயும் பகுதிக்குள் குளித்துக் கொண்டிருக்கும் போது காணாமல் போன இளைஞன் சில மணி நேரத் தேடுதலின் பின்னர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சாவகச்சேரி மீசாலையைச் சேர்ந்த என்.டிலக்சன் (வயது-21) என்ற இளைஞனே உயிரிழந்துள்ளார்.
நேற்று மாலை 4.30 மணியளவில் இரணைமடுக் குளத்தின் நான்கு வான்கதவுகள் திறக்கப்பட்டன. இடது பக்கம் இரண்டு கதவுகளும், வலது பக்கம் இரண்டு கதவுகளும் திறக்கப்பட்டிருந்தன.
அந்தப் பகுதிக்குள் பெருமளவான பொது மக்கள் குழுமியிருந்தனர். இதில் சில இளைஞர்கள்ஆழமான பகுதிக்குள் இறங்கி குளித்துக் கொண்டிருந்தாக, அங்கு நின்ற பொதுமக்கள் தெரிவித்தனர்.
யாழ்ப்பாணம் சாவகச்சேரியிலிருந்து ஜந்து பேருடன் இரணைமடுவைப் பார்க்க வந்திருந்த இளைஞனும் இதில் குளிப்பதற்கு இறங்கிய போது நீரில் இழுத்துச் செல்லப்பட்டதாக மக்கள் தெரிவித்தனர்.
இளைஞனுடன் வந்திருந்த நண்பர்கள் அங்கு அழுதவாறு நின்றிருந்தனர். அந்தப் பகுதயில் நின்ற ஊடகவியலாளர்கள், அவர்களிடம் விவரங்களைக் கேட்டு கிளிநொச்சி பிரதிப் பொலிஸ்மா அதிபர், கிளிநொச்சி படைகளின் தலைமையகத்துக்கு உடனடியாகத் தெரியப்படுத்தினர்.
அவர்கள் அங்கு உடனடியாக வரவில்லை. இதற்கிடையில் அங்கு திறக்கப்பட்டிருந்த ஒரு பகுதி வான்கதவுகள் மூடப்பட்டன. இளைஞர்கள் சிலர் நீரில் இறங்கித் தேடுதல் நடத்தினர். ஒரு மணித்தியாலத்தின் பின்னர் இளைஞர்களால், உயிரிழந்த நிலையில் டிலக்சன் மீட்கப்பட்டார்.