கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையில் ஆள் மாறாட்டம் செய்து பரீட்சை எழுதிய குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தால் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
இந்தச் சம்பவம் முல்லைத்தீவு மாவட்டத்தின் துணுக்காய் கல்வி வலயத்துக்கு உட்பட்ட பாலி நகர் மகா வித்தியாலயத்தில் கடந்த 4ஆம் திகதி இடம்பெற்றுள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பில் கல்வித் திணைக்கள வட்டாரங்கள் தெரிவித்ததாவது,
தனியார் பரீட்சார்த்தி ஒருவருக்குப் பதிலாக யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஒருவர் பரீட்சை எழுதியுள்ளார்.
பரீட்சை எழுதுபவரில் சந்தேகம் கொண்ட அதிகாரிகள், உயர் அதிகாரிகள் துணையுடன் அவரிடம் விசாரணை நடத்தியுள்ளனர்.
பரீட்சை எழுதவேண்டியவரின் வயதுக்கும், பரீட்சை எழுதியவரின் வயதுக்கும் இடையிலான வித்தியாசத்தை வைத்தே அதிகாரிகள் குதிரையோடியவரைக் கைது செய்தனர்.
அவர் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டார், என்று குறிப்பிட்டனர். சந்தேக நபர் நீதிமன்றத்தால் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
இதேவேளை, நடைபெற்றுக் கொண்டிருக்கும் சாதாரண தரப் பரீட்சைகள் தொடர்பில் இதுவரை 10 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக, பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.