அனைத்து அமைச்சர்களினதும் பொறுப்புக்களை அமைச்சின் செயலாளர்களுக்கு வழங்கி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்தரவிட்டுள்ளார்.
மஹிந்த ராஜபக்ஷ பிரதமராக நியமிக்கப்பட்டமை, புதிய அமைச்சரவை நியமிக்கப்பட்டமைக்கு எதிராக மேன் முறையீட்டு நீதிமன்றம் நேற்று(திங்கட்கிழமை) இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்திருந்தது.
இந்நிலையிலேயே அமைச்சர்களின் பொறுப்புக்களை அமைச்சின் செயலாளர்களிடம் ஜனாதிபதி ஒப்படைத்துள்ளார்.
ஜனாதிபதியின் ஊடகப்பிரிவினால் இன்று வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
‘ஜனாதிபதியினால் இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின்படி, நியமிக்கப்பட்ட பிரதமர் மற்றும் அமைச்சரவையின் செயற்பாடுகளுக்கு தற்காலிகமாக தடை விதித்து மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் பிறப்பிக்கப்பட்டுள்ள உத்தரவிற்கமைய நாட்டின் தற்போதைய சட்டத்தின் பிரகாரம் செயற்படுமாறும் ஜனாதிபதியினால் அமைச்சுக்களின் செயலாளர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய பாதுகாப்பு நாடு மற்றும் மக்களை கருத்திற்கொண்டு கடமைகளையும் பொறுப்புகளையும் எவ்வித தடையுமின்றி நிறைவேற்றுமாறு அனைத்து அரச சேவைகள் முப்படையினர் மற்றும் பொலிஸாருக்கு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார்“ என ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.