மாணவர்கள் இருவர் பொலிஸாரால் விசாரணை- பதில் துணைவேந்தர் பேராசிரியர் வேல்நம்பி

யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் பொலிஸாரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர் என்று பதில் துணைவேந்தர் பேராசிரியர் வேல்நம்பி தெரிவித்தார்.”கோப்பாய் பொலிஸில் செய்யப்பட்டிருந்த முறைப்பாடு தொடர்பில் இருமாணவர்களின் பெயர் விவரங்கள் பல்கலைக்கழகத் துணைவேந்தருக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.“இதன் பிரகாரம் இரண்டு மாணவர்களையும் நான் பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்றேன்” என்று தெரிவித்த அவர், விசாரணைகளின் பின்னர் மாணவர்கள் மீது எந்தத் தவறும் இல்லை என பொலிஸார் கூறினர் என்றும் மாணவர்கள் இன்று விடுவிக்கப்படவுள்ளனர் எனவும் பேராசிரியர் தெரிவித்தார்.

கலைப்பீட மாணவர் ஒன்றியத் தலைவரான க.ஜெனமேனன், விஞ்ஞானபீட மாணவனான எஸ்.சொலமன் ஆகிய இருவருமே கோப்பாய் பொலிஸாரால் விசாரணைக்குட்படுத்தப்பட்டனர்.திருநெல்வேலிப் பகுதியில் நேற்றுமுன்தினம் கட்சி அலுவலகம் ஒன்றின் மீது பெற்றோல் குண்டு வீசப்பட்டாகச் செய்யப்பட்ட முறைப்பாட்டை அடுத்தே இவர்கள் கைது செய்யப்பட்டனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

புதனன்று யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்தில், பொலிஸார் நடத்திய தடியடியில் சிக்கி எஸ்.சொலமன் அடிவாங்கும் படங்கள் ஊடகங்கள் அனைத்திலும் வெளியாகி இருந்தன. பொலிஸார் அவரை விசாரணைக்கு உட்படுத்தியமைக்கு இதுவே காரணமாக இருக்கலாம் என்று மாணவர்கள் சந்தேகிக்கின்றனர்

Related Posts