அரசியலமைப்பில் ஏற்படுத்தப்படும் இணக்கப்பாட்டின் மூலமே நிரந்தரத் தீர்வு: சுமந்திரன்!

அரசியலமைப்பில் ஏற்படுத்தப்படும் இணக்கப்பாட்டின் மூலமே தமிழர்களுக்கான நிரந்தரத் தீர்வினை அடைய முடியும் என தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் குறிப்பிட்டுள்ளார்.

நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வின் போது உரையாற்றிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் இதனைத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

“ஒரு நாட்டினுடைய அரசியலமைப்பு எவர் நினைத்தாலும் மீறமுடியும் என நினைத்தால் நாம் எதிர்பார்க்கும் நிரந்தரத் தீர்வினை அடைய முடியாது. நாம் ஜனாதிபதிக்கு நேற்று அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் கடந்த ஒக்ரோபர் 26 ஆம் திகதிக்கு முன்னதான நிலைக்கு ஆட்சி மாற்றப்பட வேண்டும் என்பதை உறுதியாகத் தெரிவித்துள்ளோம்.

இந்நிலையில் ஜனாதிபதியால் பிரதமராக நியமிக்கப்பட்ட ஒருவர் கடந்த ஒரு மாதமாக நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையினை நிரூபிக்கத் தவறியுள்ளார்.

எனவே இனிமேலும் நாங்கள் பேசாது இருக்கக்கூடாது என்பதனை நாங்கள் குறித்த கடிதத்தில் ஆணித்தரமாக வலியுறுத்தியுள்ளோம். அத்துடன் நாட்டில் ஏற்பட்டிருக்கும் குழப்பநிலை மாறவேண்டும் என்பதற்காகவே பொறுப்பான பிரதான எதிர்க்கட்சியான நாங்கள் இந்த நடவடிக்கைகளை எடுத்திருக்கின்றோம்.

அரசியலமைப்பினை மீறுவது என்பது மிகவும் பாரதூரமான விடயமாகும். புதிய அரசியலமைப்பின் மூலமாகவே நாங்கள் நீண்டகாலத் தமிழ்த் தேசியப் பிரச்சினைக்கு தீர்வைப் பெற்றுக்கொள்ளமுடியும் என்பது மிகத் தெளிவாக நாம் சுட்டிக்காட்டுகின்ற விடயமாகும்” என அவர் மேலும் குறிப்பிட்டார்.

Related Posts