கோப்பாய் பொலிஸ் பிரிவில் சிறுவன் ஒருவரைத் தாக்கி சித்திரவதைக்குட்படுத்தினார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டவர் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் பிணையில் விடுவிக்கப்பட்டார்.
“எனது மகன்தான் முறைப்பாட்டாளர். அவருக்கு 15 வயது. 9 முகநூல் கணக்குகளை அவர் திறந்துவைத்துள்ளார். அதில்தான் அவர் பொழுதைக் கழிக்கிறார். அதனால் அவ்வாறு நடந்துகொள்ளவேண்டாம் என்று சந்தேகநபர் புத்திமதி கூறினார். அவர்தான் எமக்கு உதவிகளை செய்பவர், அந்த வகையில்தான் மகனுக்கு புத்திமதி கூறினார். அதனால் ஆத்திரமடைந்து சந்தேகநபர் மீது மகன் பொய்யான முறைப்பாட்டை வழங்கிவிட்டார்” என்று சிறுவனின் தாயார் மன்றில் தெரிவித்தார்.
“சிறுவனின் தந்தை வெளிநாட்டில் உள்ளார். சந்தேகநபர் சிறுவனின் வீட்டுக்குச் சென்று வருகின்றவர் என்று விசாரணையில் தெரிவிக்கப்பட்டது. சிறுவனை சந்தேகநபர் தாக்கியுள்ளார்” பொலிஸார் மன்றுரைத்தனர்.
வழக்கை ஆராய்ந்த மன்று சந்தேகநபரை பிணையில் விடுவித்து வழக்கை ஒத்திவைத்தது.
கோப்பாய் பொலிஸ் பிரிவில் 15 வயதுச் சிறுவன் ஒருவர் கடுமையாகத் தாக்கப்பட்டார் என்று பொலிஸ் மற்றும் நல்லூர் பிரதேச செயலக சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தருக்கு முறைப்பாடு வழங்கப்பட்டது.
அதுதொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் சிறுவனைத் தாக்கிய குற்றச்சாட்டில் ஒருவரைக் கைது செய்தனர். அவரை யாழ்ப்பாணம் நீதிமன்றில் நீதிவான் சின்னத்துரை சதீஸ்தரன் முன்னிலையில் நேற்று முற்படுத்தினர்.
இதன்போதே நீதிமன்று சந்தேகநபரை பிணையில் விடுவித்தது.