பல்கலைக்கழக விடுதிக்குள் இராணுத்தினர் அத்துமீறி நுழைந்தது தொடர்பாகவோ அல்லது பொலிஸாரால் மாணவர்கள் தாக்கப்பட்டமை தொடர்பிலோ எதுவித முறைப்பாடும் செய்யப்படவில்லை. முறைப்பாடு செய்யப்பட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பிரதிப் பொலிஸ்மா அதிபர் (டி.ஐ.ஜி) எரிக் பெரேரா தெரிவித்தார்.
யாழ். மாவட்ட சிவில் பாதுகாப்புக் குழுக்கூட்டம் நல்லூர் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நேற்று இடம்பெற்றது. இதன்போதே எரிக்பெரேரா இவ்வாறு தெரிவித்தார்.
இந்தக் கூட்டத்தில் கருத்து வெளியிட்ட வலி.தென்மேற்குப் பிரதேச சபைச் செயலாளர் ஜெயநேசன், யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் உணர்வுபூர்வமாகத் தமது கலாசார நிகழ்வுகளை 27ஆம் திகதி கடைப்பிடிக்க முயன்றனர்.
இதன்போது அத்துமீறி உள்ளே நுழைந்த இராணுவத்தினர் தாக்குதல் நடத்தினர். அத்துடன் பெண்கள் விடுதிக்குள் ஆயுதங்களுடன் நுழைந்த இராணுவத்தினர் அட்டகாசத்தில் ஈடுபட்டனர்.
சிவில் நிர்வõகம் யாழ்ப்பõணத்தில் நடைமுறையில் இருக்கின்றது என்று சொல்லப்படுகின்றது. அப்படியானால் எதற்கு இராணுவத்தினர் சிவில் நிர்வாகத்தில் தலையீடு செய்கின்றனர்.
பொலிஸார் ஏன் இராணுவத்தினரை ஆர்ப்பாட்டத்தை அடக்குவதற்கு öகாண்டுவர வேண்டும்? மாணவர்களை இராணுவத்தினரும் பொலிஸாரும் இணைந்து தாக்கியுள்ளனர். சிவில் நிர்வாகத்தை ஒழுங்காக முன்னெடுக்க முடியாத நிலை காணப்படுகிறது என்று சுட்டிக்காட்டினார்.
இதற்குப் பதிலளித்த பிரதிப் பொலிஸ்மா அதிபர் இராணுவம் விடுதிக்குள் புகுந்து தாக்கியதாகவோ, மாணவர்கள் மீது இராணுவத்தினர் தாக்குதல் மேற்கொண்டதாகவோ எந்தவொரு முறைப்பாடும் எங்களுக்குக் கிடைக்கவில்லை. முறைப்பாடு கிடைத்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
இதேவேளை தாக்குதலில் காயமடைந்த மாணவர்கள் வைத்திய பரிசோதனை முடிந்த பின்னர், பொலிஸாரிடம் பதிவு செய்வதற்காகக் காத்திருந்தனர். பொலிஸாரும் இரவு 8 மணிக்கு வருவதாக முதலில் தெரிவித்துவிட்டு பின்னர் நீண்ட நேரமாகியும் அவர்கள் வரவில்லை. புலனாய்வுப் பிரிவினர் தொடர்ந்தும் மாணவர்களை மிரட்டியதால், மாணவர்கள் வைத்தியசாலைக்குத் தெரிவிக்காமல் இரவு 10:30 மணியளவில் வைத்தியசாலையை விட்டு வெளியேறியுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.
அத்துடன் பல்கலைக்கழகம் உத்தியோக பூர்வமாக இதுவரை முறைப்பாடு எதனையும் செய்யவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது