வவுனியாவில் மாணவர்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் சிலர் குழப்பம் விளைத்து மோதலில் ஈடுபட்டமையால் அப்பகுதியில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
பாடசாலைக்கு வழங்கப்படுகின்ற சத்துணவு திட்டத்தில் ஊழல் இடம்பெற்றுள்ளதாக போலியான குற்றச்சாட்டை முன்வைத்தமைக்கு எதிராக வவுனியா முஸ்லீம் மகா வித்தியாலய மாணவர்கள் இன்று (வெள்ளிக்கிழமை) ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டிருந்தனர்.
இதன்போது, அவ்விடத்திற்கு வருகை தந்த சிலர் ஆர்ப்பட்டத்தில் ஈடுபட்டிருந்த மாணவர்களோடு வாய் தர்க்கத்தில் ஈடுபட்டமையால் இருதரப்பினருக்கும் இடையில் மோதல் நிலை ஏற்பட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து மாணவர்களிற்கு சார்பாக குழுமியிருந்த பெற்றோர் மற்றும் பாடசாலை நலன்விரும்பிகள் ஆகியோரும் முரண்பட்டுக்கொண்டனர்.
இதனால் அப்பகுதிக்கு அதிகளவான பொலிஸார் குவிக்கப்பட்டு நிலைமை உடனடியாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.
கடந்த புதன்கிழமை பாடசாலைக்கான சத்துணவு திட்டத்தின் கீழ் பாடசாலைக்கு வழங்கப்பட்ட டின்மீனில் ஊழல் நடைபெற்றிருப்பதாக தெரிவித்து பாடசாலையை சிலர் முற்றுகையிட்டிருந்தனர்.
ஆகையால் கோட்டகல்வி அதிகாரியொருவர் அவ்விடத்திற்கு வருகைதந்து, குறித்த விடயம் தொடர்பில் ஆராய்ந்ததுடன் ஊழல்கள் நடைபெறவில்லை எனவும்தெரிவித்திருந்தார்.
ஆகவே போலியான குற்றசாட்டுகளை முன்வைத்து சிலர் பாடசாலைக்கும், அதிபருக்கும் அபகீர்த்தியை ஏற்படுத்துவதாக தெரிவித்து இன்று மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.