யாழ்.பல்கலைக்கழக வளாகத்துக்குள் படையினரை அனுப்பியது யார்? அவர்களுக்கு அங்கு என்ன வேலை? எனக் கேள்வி எழுப்பிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா இதற்கு உயர்கல்வி அமைச்சர் உரிய பதிலளிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.
நாடாளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே மாவை இதனைத் தெரிவித்தார். அவர் தனது உரையில் மேலும் தெரிவித்ததாவது:
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர் ஈ.சரவணபவன் உண்மை நிலைமையை நேரில் கண்டறியச் சென்றபோது அவருடைய வாகனம் இராணுவத்தினரின் முன்னிலையிலேயே தாக்கப்பட்டுள்ளது.
இதன் பின்னணியில் இருந்து செயற்பட்டவர்கள் யார்? உயர்கல்வி அமைச்சர் இந்தச் சந்தர்ப்பத்தில் சபையில் இருக்கின்றார். உங்களுடைய உயர் கல்வி அமைச்சின் நிர்வாகத்தின் கீழ் இயங்கும் யாழ். பல்கலைக்கழகத்தினுள் இராணுவம் சென்றது எப்படி? இராணுவத்தை அங்கே அனுமதித்தது யார்? உயர் கல்வி அமைச்சர் இந்த விடயம் தொடர்பாக பாரபட்சமற்ற விசாரணை நடத்தி சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பல்கலைக்கழகத்தில் ஆண், பெண் மாணவர் விடுதிகளுக்குள் அத்துமீறி நுழைந்து படையினர் அட்டகாசம் புரிந்துள்ளனர். இராணுவத்தினரின் அடாவடித் தனங்களைக் கண்டித்து மாணவர்கள் வளாகத்துக்குள்ளேயே தமது எதிர்ப்பைத் தெரிவித்தனர்.
ஆனால் ஆயிரத்துக்கும் அதிகமான இராணுவத்தினர் அங்கு சென்று காட்டுமிராண்டித் தனமான தாக்குதல்களை நடத்தி உள்ளனர். அங்கு பெரும் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
மீள்குடியேற்றம் தொடர்பாக இங்கு சமர்ப்பிக்கப்பட்ட விடயங்களில் உண்மை இல்லை. இன்றும் கூட மூன்று லட்சத்துக்கு அதிகமான மக்கள் அகதிகளாக இருக்கின்றனர்.
மீள்குடியேற்றம் என்ற பெயரில் எதுவிதமான அடிப்படை வசதிகளும் இன்றித் தட்டுக்குடில்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். பாதைகளில் பிச்சைக்காரர்கள் போல் அவல வாழ்வு வாழ்கின்றனர்.
ஐ.நா. தீர்மானத்தின்படி இடம்பெயர்ந்தவர்களை மீண்டும் சொந்த இடங்களில் குடியமர்த்த வேண்டும் என்ற கடப்பாடு உண்டு. ஆனால் உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியும் உதாசீனப்படுத்தி அம்மக்கள் சொந்த இடங்களுக்குச் சென்று வாழத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் இன்னும் 21 முகாம்களில் 80 ஆயிரத்துக்கும் அதிகமானோர் அகதிகளாக இருக்கின்றனர். அவர்கள் மீண்டும் இங்கு வர விரும்புகிறார்கள். அவர்கள் மீண்டும் வந்தால் தமது சொந்த இடங்களில் வந்து குடியேற சகல உட்கட்டமைப்பு வசதிகளும் ஏற்படுத்த வேண்டும்.
நாம் இந்த சபையில் தவறான தகவல்களை வெளியிடுவதாக அரச தரப்பில் குற்றஞ் சுமத்துகின்றனர். நான் உங்களை, அழைக்கின்றேன். நீங்கள் என்னுடன் வாருங்கள் வந்து உண்மை நிலையைக் கண்டறிய வேண்டும் என்றார்.