கொடிகாமம் பகுதியை சேர்ந்த 7 வயது சிறுமியை பெற்றோரின் பாதுகாப்பில் இருந்து கடத்தி சென்று வன்புணர்வுக்கு உட்படுத்திய குற்றவாளிக்கு 12 வருட கால கடூழிய சிறைத்தண்டனை விதித்து யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேமசங்கர் தீர்ப்பளித்துள்ளார்.
கொடிகாமம் பகுதியை சேர்ந்த ஏழு வயது சிறுமி கடந்த 2011ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 19ஆம் திகதி பெற்றோர்கள் மற்றும் சகோதரர்களுடன் இரவு தூங்கிக்கொண்டு இருந்த வேளை வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்த குற்றவாளி சிறுமியை கடத்தி சென்று வீட்டுக்கு சற்று தொலைவில் இருந்த கேணியடியில் வைத்து சிறுமியை வன்புணர்ந்து உள்ளார்.
அதனால் பாதிக்கப்பட்ட சிறுமி ஒரு மாத காலமாக வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வந்தார். அது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட சாவகச்சேரி போலீசார் குறித்த நபரை கைது செய்து சாவகச்சேரி நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தினார்கள்.
சாவகச்சேரி நீதிவான் நீதிமன்றில் நடைபெற்ற சுருக்கமுறையற்ற விசாரணைகளை அடுத்து வழக்கு கோவைகள் சட்டமா அதிபர் திணைகளத்திற்கு ஒப்படைக்கப்பட்டது.
அதனை அடுத்து சட்டமா அதிபர் திணைக்களத்தால் பெற்றோரின் பாதுகாப்பில் இருந்து சிறுமியை கடத்தி சென்றமை மற்றும் வன்புணர்ந்தமை ஆகிய இரு குற்றசாட்டுகள் சுமத்தப்பட்டு யாழ்.மேல் நீதிமன்றில் குற்றபகிர்வு பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது.
வழக்கு தொடுனர் தரப்பில் அரச சட்டவாதி மாதினி விக்னேஸ்வரன் முன்னிலையாகி சாட்சியங்களை நெறிப்படுத்தினார். அதனை அடுத்து நடைபெற்ற வழக்கு விசாரணைகளை அடுத்து நேற்றைய திகதிக்கு தீர்ப்புக்காக நீதிபதி வழக்கினை ஒத்திவைத்திருந்தார். அந்நிலையில் நேற்றைய தினம் தீர்ப்புக்காக குறித்த வழக்கு யாழ்.மேல்.நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேமசங்கர் முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்டது.
அதன் போது நீதிபதி வழக்கு விசாரணைகளின் அடிப்படையில் எதிரியை குற்றவாளியாக கண்டு பெற்றோரின் பாதுகாப்பில் இருந்து சிறுமியை கடத்தி சென்ற குற்றத்திற்காக 5 வருட கடூழிய சிறைத்தண்டனையும் , வன்புணர்வு குற்றத்திற்காக 7 வருட கடூழிய சிறைத்தண்டனையையும் விதித்து தீர்ப்பளித்தார்.
அத்துடன் 10 ஆயிரம் ரூபாய் தண்ட பணம் செலுத்த வேண்டும் எனவும் , அதனை செலுத்த தவறின் 10 மாத சிறைத்தண்டனையும் , பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 5 இலட்ச ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் எனவும் அதனை வழங்க தவறின் 10 வருட சிறைத்தண்டனையும் விதித்து தீர்ப்பளித்தார்.