யாழ்ப்பாணத்தில் சகல குற்றச்செயல்களையும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர பொலிஸார் விசேட நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாக பொலிஸ் அத்தியட்சகர் வர்ண ஜெயசுந்தர தெரிவித்தார்.
யாழ் மாவட்டஅரசாங்க அதிபரும், சிவில் பாதுகாப்புக்குழுத் தலைவருமான நாகலிங்கம் வேதநாயகன் தலைமையில் விசேட கூட்டம் மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்றது.
இக்கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
“யாழில் அனைத்துக் குற்றச்செயல்களையும் கட்டுப்படுத்துவதற்காக தற்போது முன்னெடுக்கப்படும் ரோந்து நடவடிக்கைகள் இனிவரும் நாட்களில் அதிகரிக்கப்படும்.
யாழ்ப்பாணக் குடாநாட்டில் அண்மைக்காலமாக இடம்பெற்றுவரும் குற்றச்செயல்கள் தொடர்பில் மக்கள் பிரதிநிதிகள் மற்றும் அரச அதிகாரிகளினால் பொலிஸாருக்கு முறைப்பாடுகள் அளிக்கப்பட்டுள்ளன.
அத்துடன் யாழ்ப்பாண மாநகரின் புறநகர் பகுதிகளை இலக்குவைத்து அண்மைக் காலங்களில் திருட்டுச் சம்பவங்கள் அதிகரித்துள்ளதுடன், கத்திமுனையில் கொள்ளையிடும் சம்பவங்களும் இடம்பெறுகின்றன.
இவ்விடயங்கள் தொடர்பில் பொலிஸார் பல நடவடிக்கைகளை ஏற்கனவே முன்னெடுத்திருந்தாலும், சிறப்பு பொலிஸ் ரோந்து நடவடிக்கைகளை இனிவரும் காலங்களில் தீவிரப்படுத்தி சகல குற்றச்செயல்களையும் கட்டுக்குள் கொண்டுவர நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்” என அவர் மேலும் குறிப்பிட்டார்.