யாழில் நகைகளை கொள்ளையடித்து வந்த கொள்ளை கும்பலையும், அவற்றை கொள்வனவு செய்து வந்த வர்த்தகர் ஒருவரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
தென்மராட்சி பகுதியிலுள்ள வங்கி ஒன்றின் முகாமையாளர் கடந்த வாரம் வங்கியிலிருந்து வீடு திரும்பிய வேளை மோட்டார் சைக்கிளில் வந்த இரு கொள்ளையர்கள் முகாமையாளர் அணிந்திருந்த மூன்றரைப் பவுண் தங்க சங்கிலியை அறுத்து சென்றனர்.
கொள்ளையர்களின் மோட்டார் சைக்கிள் இலக்கத்தை அடையாளம் கண்டு சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் முகாமையாளர் முறைப்பாடு செய்தார்.
முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் மோட்டார் சைக்கிளின் உரிமையாளரை நேற்றைய தினம்(ஞாயிற்றுக்கிழமை) கைது செய்தனர்.
கைது செய்யப்பட்டவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளை அடுத்து கொள்ளையடிக்கப்பட்ட நகைகளை கொள்வனவு செய்தார் எனும் குற்றச்சாட்டில் யாழ்.நகரிலுள்ள நகைக்கடை உரிமையாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளையடுத்து கோப்பாய், மானிப்பாய் மற்றும் யாழ். நகர் பகுதியை சேர்ந்த நால்வரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர்களிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளார்.