பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் காதலித்து ஏமாற்றிவிட்டார் என்ற மனவிரக்தியில் இளம்பெண் ஒருவர், காங்கேசன்துறை பொலிஸ் நிலையத்துக்கு முன்பாக தற்கொலைக்கு முயன்றார். அவரைத் தடுத்த பொலிஸார், கைது செய்து நீதிமன்றில் முற்படுத்தினர். அந்த இளம் பெண்ணை பராமரிப்பு நிலையத்தில் அனுமதிக்குமாறு மல்லாகம் நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்தச் சம்பவம் கடந்த வியாழக்கிழமை இடம்பெற்றது.
காங்கேசன்துறை பொலிஸ் நிலையத்தில் பணியாற்றும் வவுனியாவைச் சேர்ந்த தமிழ் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர், 20 வயதுடைய இளம் பெண்ணை காதலித்து வந்தார். அந்தப் பெண்ணை அழைத்துச் சென்று சில நாள்கள் வாழ்ந்துள்ளார். எனினும் அண்மைய நாள்களில் அந்தப் பெண்ணுடனான தொடர்பை பொலிஸ் உத்தியோகத்தர் துண்டித்தார்.
அதனால் விரக்தியடைந்த அந்தப் பெண் காங்கேசன்துறை பொலிஸ் நிலையத்துக்கு முன்பாக வந்து தனக்குத் தானே மண்ணெண்ணை ஊற்றி தீவைத்து தற்கொலைக்கு முயன்றார்” என்று நீதிமன்றில் தெரிவிக்கப்பட்டது.
தற்கொலைக்கு முயன்ற இளம் பெண்ணைக் கைது செய்த காங்கேசன்துறைப் பொலிஸார், ஏ அறிக்கையை மல்லாகம் நீதிமன்றில் முன்வைத்து மன்றில் முற்படுத்தினர்.
இளம் பெண்ணை விசாரணை செய்த மன்று, அவரை பெண்கள் பராமரிப்பு நிலையத்தில் அனுமதிக்குமாறு உத்தரவிட்டது.