இந்திய மீனவர்களின் அத்துமீறல்களை கண்டித்து யாழ் மீனவர்கள் ஆர்ப்பாட்டம்

இந்திய மீனவர்களின் அத்துமீறல்களை கண்டித்து இன்றைய தினம் யாழ் குடாநாட்டை சேர்ந்த மீனவர்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்து வருகின்றனர்.

நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்லும் இந்திய மீனவர்களின் அத்துமீறல் தொடர்ந்து இடம்பெற்று வருவதனால் அதனைக் கண்டிக்கும் முகமாக இன்று காலை 10.30 மணியளவில் ஜோன் பொஸ்கோ பாடசாலைக்கு முன்பாக ஆரம்பமாகியது.

இவ் ஆர்ப்பாட்டத்தின் முடிவில் அரசாங்க அதிபர், இந்திய துணைத் தூதரகம், மற்றும் அமைச்சர் டக்ளஸ் தேவாநனந்தா ஆகியோரிடம் மகஜர்கள் கையளிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

(இரண்டாம் இணைப்பு )
‘இந்திய மீனவர்களின் அத்துமீறிய தொழில் நடவடிக்கைகளையும் இந்திய இழுவைப் படகுகளின் செயற்பாட்டையும் 15 நாட்களுக்குள் கட்டுப்படுத்தாவிடின் அந்நாட்டு மீனவர்களுக்கு எதிராக கடலில் பாரிய போர் வெடிக்கும்’ என்று யாழ் மாவட்ட மீனவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இந்திய மீனவர்களின் அத்துமீறிய செயற்பாட்டைக் கண்டித்து யாழ்ப்பாணத்திலுள்ள இந்திய துணைத் தூதரகத்துக்கு முன்னால் யாழ். மீனவர்களால் இன்று வியாழக்கிழமை ஆர்ப்பாட்டமொன்று நடத்தப்பட்டது. இதன்போதே இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

ஆர்பாட்டத்தினைத் தொடர்ந்து, தமது கோரிக்கைகள் அடங்கிய மகஜர் ஒன்று இந்திய துணைத் தூதரிடம் கையளிக்கப்பட்டது. இந்த மகஜர் தொடர்பில் உடனடியாக இந்திய அரசாங்கத்தின் கவனத்திற்கு கொண்டுசெல்வதாக இந்திய துணைத் தூதுவர் உறுதியளித்துள்ளதாக கடற்தொழிலாளர் கூட்டுறவுச் சங்களின் சம்மேளனத் தலைவர் எமிலியாம்பிள்ளை தெரிவித்தார்.

‘தொடர்ச்சியாக வடபகுதிக் கடலில் இந்திய மீனவர்களின் அத்துமீறிய தொலில் நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றது அதனால் எமது பகுதி கடற்தொழிலாளர்கள் பெரும் பாதிப்புக்களை எதிர்நோக்கி வருகின்றனர்’ என்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மீனவர்கள் தெரிவித்தனர்.

‘இது தொடர்பில் பல தடவைகள் இரண்டு நாட்டு அரசாங்கத்திடமும் முறைப்பாடு செய்யப்பட்டு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்த பிரச்சனைக்கு இன்றிலிருந்து 15 நாட்களுக்குள் தீர்வு காணப்படாவிட்டால் இந்திய மீனவர்களுக்கு எதிராக கடலில் பாரிய போர் வெடிக்கும்’ என்று அவர்கள் எச்சரித்துள்ளனர்.

அத்துடன், ‘இந்திய கடல் எல்லைக்குள் பிரவேசிக்கும் எமது மீனவர்களை இந்தியக் கடற்படை கைது செய்வது போல, இலுவைப் படகுகளில் எமது கடற்பரப்பில் தொழில் நடவடிக்கையில் ஈடுபடும் இந்திய மீனவர்களையும் எமது கடற்படையினர் கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

Related Posts