தமிழ் அரசியல் கைதிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்கி அரசாங்கம் தமது நல்லெண்ணத்தை தமிழ் மக்களுக்கு வெளிப்படுத்த வேண்டுமென ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்தியுள்ளார்.
தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையைக் கோரி யாழ். பல்கலைக்கழக மாணவர்களால் முன்னெடுக்கப்பட்டு வரும் நடை பவணி, இன்று (சனிக்கிழமை) அநுராதபுரத்தை சென்றடைந்துள்ளது.
இந்நிலையில், கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் சென்றுகொண்டிருந்த டக்ளஸ், அநுராதபுரத்தில் இறங்கி நடைபவணியில் ஈடுபட்டவர்களுக்கு ஆதரவு தெரிவித்து இந்தக் கருத்தைக் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ் அரசியல் கைதிகளை தொடர்ந்தும் சிறைகளில் அடைத்துவைப்பதில் எவ்வித அர்த்தமும் இல்லையெனக் குறிப்பிட்ட அவர், தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வரவு செலவுத்திட்டம் மீதான ஆதரவு நிபந்தனையாக அரசுக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு முன்வைக்க வேண்டுமென கேட்டுக்கொண்டார்.