கத்தி, கொட்டன்களுடன் அதிகாலையில் வீடுகளுக் குள் புகுந்த கும்பல் அட்டூழியத்தில் ஈடுபட்டது. ஐந்து வீடுகளில் இருந்த பொருள்கள், வேலிகள், மின்குமிழ் கள் தாக்கிச் சேதப்படுத்தப்பட்டுள்ளன.
இந்தச் சம்பம் நேற்று அதிகாலை யாழ்ப்பாணம் ஏழாலையில் நடந்துள்ளது.
கொக்குவில், சுன்னாகம், இணுவில், மானிப்பாய் பகுதிகளில் கடந்த வாரம் இடம்பெற்ற தொடர்வன்முறைச் சம்பவங்களையடுத்து அந்தப் பகுதிகளில் 24 மணிநேரம் சுற்றுக்காவல் இடம்பெற்றிருந்தது.
அத்துடன் திடீர் சுற்றிவளைப்பும் மேற்கொள்ளப்பட்டு சந்தேகத்தில் 3பேர் கைது செய்யப்பட்டிருந்தனர். இவ்வாறானதொரு நிலையில், ஏழாலையில் வன்முறைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
அதிகாலை வேளை, வீட்டு வளவுக்குள் நுழைந்த 4 பேர் அங்கு முற்றத்தில் ஒளிர்ந்து கொண்டிருந்த மின்குமிழை முதலில் உடைத்துத்துள்ளனர். பின்னர் நீர்த்தாங்கி, கதிரைகள், உள்ளிட்ட தளபாடங்களைச் சேதமாக்கினர். வீட்டின் உரிமையாளர் அவலக் குரல் எழுப்ப அவர்கள் அங்கிருந்து தப்பியோடினர்.
அதன்பின்னர் அந்தப் பகுதியில் உள்ள 4 வீடுகளுக்குள் அந்தக் கும்பல் நுழைந்து அட்டகாசத்தில் ஈடுபட்டது என்று தெரிவிக்கப்பட்டது. வீட்டு வேலிகளைச் சேதமாக்கியதுடன், வீட்டு வளவில் இருந்த பொருள்களைச் சேதமாக்கினர் என்றும், சிலவற்றை எடுத்துச் சென்றனர் என்றும் தெரிவிக்கப்பட்டது.
இந்தச் சம்பவங்களால் அந்தப் பகுதி மக்கள் விழிப்படையவே அவர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். தப்பியோடும்போது வீடுகள் மீது கற்களை வீசியவாறு அவர்கள் தப்பிச் சென்றுள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் கட்டுவன் பகுதியூடாகத் தப்பிச் சென்றனர் என்றும் மக்கள் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பாக 119 அவசரப் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டும் பொலிஸார் சம்பவ இடத்துக்கு வரவில்லை என்று மக்கள் விசனம் தெரிவித்தனர். முற்பகல் 10 மணியளவிலேயே சுன்னாகம் பொலிஸார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
கட்டுவன், தெல்லிப்பழைப் பகுதிகளில் கடந்த சில நாள்களாக கத்தி முனையிலான வழிப்பறிகள், திருட்டுக்கள், வர்தக நிலையங்களை உடைத்து திருடுதல் போன்ற சம்பவங்கள் இடம்பெறுகின்றன என்று மக்கள் கூறுகின்றனர்.
இந்தச் சம்பவங்கள் அதிகாலை வேளையிலேயே நடக்கின்றன என்றும், அவை தொடர்பில் எவரும் கைது செய்யப்படுவதில்லை என்றும் மக்கள் விசனம் தெரிவித்தனர்.