இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் மகேஸ் சேனாநாயக்க கோருவது போன்று பொலிஸ் அதிகாரத்தை இராணுவத்தினருக்கு வழங்க முடியாதென ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். அது ஜனநாயகத்திற்கு ஏற்புடைய செயற்பாடு அல்லவென்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பு, பத்தரமுல்லையில் நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறுகையில்,
“நாட்டில் ஏற்படுகின்ற பிரச்சினைகளை கட்டுப்படுத்தக்கூடிய முழு பொறுப்பும் பொலிஸ் அதிகாரிகளை சார்ந்தது. அந்த அதிகாரத்தை இராணுவத்திற்கு வழங்க முடியாது.
மேலும் வடக்கில் இடம்பெறுகின்ற பிரச்சினைகளை தீர்ப்பதற்கும் அங்குள்ள ஆவா குழுவை கட்டுப்படுத்துவதற்கும் உரிய செயற்றிட்டங்கள் அப்பகுதியில் இன்னும் மேற்கொள்ளப்படவில்லை.
இதற்காக இராணுவத்தினரிடம் அதிகாரங்களை வழங்கினால் பொலிஸ் தலைமைத்துவத்தின் மீது நம்பிக்கையற்ற தன்மை சமூகத்தில் உருவாவதுடன் ஜனநாயகத்துக்கும் ஏற்புடையதல்ல.
ஆகையால் இராணுவத்தினரின் கையில் பொலிஸ் அதிகாரங்கள் வழங்கப்படுமானால் நாம் அதற்கு முழுமையான எதிர்ப்பை வெளிப்படுத்துவோம்” என பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் மேலும் தெரிவித்துள்ளார்.