தமிழ் அரசியல் கைதிகளுக்கு ஆதரவு தெரிவித்து யாழில் கவனயீர்ப்பு போராட்டம்

சிறையில் உண்ணாவிரதம் இருக்கும் தமிழ் அரசியல் கைதிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் மூன்று அம்சக் கோரிக்கைகளை முன்வைத்தும் யாழில் கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

சமூக நீதிக்கான வெகுஐன அமைப்பின் ஏற்பாட்டில் புத்தூரில் நேற்று (திங்கட்கிழமை) இப்போராட்டம் நடைபெற்றது.

அனுராதபுரம் சிறையுள்ள தமிழ் அரசியல் கைதிகள் தம்மை விடுதலை செய்யுமாறு கோரி கடந்த பல நாட்களாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இவர்களுக்கு ஆதரவாக யாழ்ப்பாணம், வவுனியா, கொழும்பு, கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களில் பல போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.

இந்நிலையில் சமூக நீதிக்கான அமைப்பு உண்ணாவிரதம் இருக்கும் கைதிகளுக்கு ஆதரவு தெரிவித்து போராட்டத்தை முன்னெடுத்திருந்தது.

இதன்போது உண்ணாவிரதம் இருக்கும் அரசியல் கைதிகளின் கோரிக்கைகளை நிறைவேற்று, அனைத்து அரசியல் கைதிகளையும் விடுதலை செய், பயங்கரவாத்த் தடைச் சட்டத்தை உடனே விலக்கு ஆகிய மூன்று அம்சக் கோரிக்கைகளை முன்வைத்திருந்தன.

இக்கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கு அரசாங்கம் விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமெனவும் வலியுறுத்தின.

Related Posts