சிறையில் வாடும் அரசியல் கைதிகளின் விடுதலைக்காக குரல் கொடுக்க வேண்டியது ஒவ்வொரு தமிழ் குடிமகனதும் கடமை என, வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.
அநுராதபுரம் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் முன்னெடுத்துவரும் உண்ணாவிரத போராட்டத்திற்கு ஆதரவளிக்கும் வகையிலும், அவர்களின் விடுதலையை வலியுறுத்தியும் இன்று (வெள்ளிக்கிழமை) கண்டன போராட்டமொன்று இடம்பெற்றிருந்தது.
குறித்த போராட்டத்தில் கலந்துக் கொண்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே மாகாண சபை உறுப்பினர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர், ”மிக நீண்டகாலமாக சிறையில் வாடும் தமிழ் அரசியல் கைதிகள் எவ்வித நிபந்தனைகளுமின்றி பொதுமன்னிப்பு வழங்கி விடுதலை செய்யப்பட வேண்டும்.
அவர்களின் விடுதலைக்காக அவர்களது குடும்பத்தினரும், நண்பர்களும் மாத்திரமின்றி அனைத்து குடிமகன்களும் குரல் கொடுக்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.