தமிழ் அரசியல் கைதிகள் விடயத்தில் நல்லாட்சி அரசாங்கம் அவசர தீர்மானமொன்றை மேற்கொள்ள வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் வலியுறுத்தியுள்ளார்.
அநுராதபுரம் சிறைச்சாலையில் தமிழ் அரசியல் கைதிகள் மீண்டும் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்ற நிலையில், இது தொடர்பாக நேற்று (செவ்வாய்க்கிழமை) நாடாளுமன்றத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.
மேலும், சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளின் விடுதலை குறித்து கவனம் செலுத்தாது நாட்டில் நல்லிணக்கம் ஒருமைப்பாடு குறித்து பேசுவதில் எவ்வித பயனும் இல்லை என்றும் அவர் சபையில் சுட்டிக்காட்டினார்.
தங்களை விடுவிக்குமாறு அல்லது புனர்வாழ்வளிப்புக்கு உட்படுத்துமாறு கோரி அநுராதபுரம் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் எட்டு பேர், கடந்த 14ஆம் திகதி முதல் இன்று ஆறாவது நாளாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அரசியல் கைதிகளில் ஒருவர் சுகயீனம் காரணமாக சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.