யாழ்ப்பாண மாவட்டத்தில் கடந்த இரண்டு தினங்களில் இடம்பெற்ற ‘ஜனாதிபதியின் மக்களுக்கான உத்தியோகபூர்வ சேவைகள்’ வேலைத்திட்டத்தின் ஊடாக பல பொது சேவைகள் நிறைவேற்றப்பட்டன. இதன்போது, உத்தியோகபூர்வமாக பதிவுத் திருமணம் மேற்கொள்ளாத 18 தம்பதிகளுக்கு அரச செலவில் பதிவுத் திருமணங்கள் மேற்கொள்ளப்பட்டன.
கோப்பாய் மற்றும் தெல்லிப்பளை உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த உரிய முறையில் பதிவு திருமணத்தை மேற்கொள்ளாமல் வாழ்ந்து வந்த தம்பதிகளுக்கே உள்நாட்டலுவல்கள் அமைச்சின் பொது சேவையின் ஊடாக பதிவு திருமணம் நடத்தப்பட்டது. உள்நாட்டலுவல்கள் அமைச்சின் ஊடக பணிப்பாளர் சஜீவ விஜேவீர வௌியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இந்த விடயங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.
யாழ்ப்பாணத்தில் உத்தியோகபூர்வ பொது சேவைகளின் பணிகள் ஆரம்பிக்கப்பட்டவுடன் உள்நாட்டலுவல்கள் அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகள் வீடு வீடாக சென்று பொதுமக்களின் தீர்க்கப்படாத பிரச்சினைகளை கேட்டறிந்து கொண்டனர். இதனடிப்படையில், கோப்பாய் பிரதேச செயலாளர் பிரிவில் மாத்திரம் சுமார் 27,189 பிரச்சினைகள் தொடர்பாக முறைப்பாடுகள பதிவு செய்யப்பட்டுள்ளன.
அதனைவிட உட்கட்டமைப்பு, வீடமைப்பு, கழிப்புறை வசதிகள் மற்றும் பெண்களை கும்பத்தை தலைவராக கொண்ட குடும்பங்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாக 30,000 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன. அவற்றுள் அதிகளவான பிரச்சினைகளுக்கு வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்ட தினத்திலேயே தீர்வு காணப்பட்டு விட்டதாக அமைச்சு தெரிவித்துள்ளது.
நேற்று முன்தினம் சுமார் 2526 பேர் பொது சேவைகளின் போது கலந்து கொண்டதாகவும், அவர்கள் நேரடியான முன்வைத்த 4028 முறைப்பாடுகளுக்கு அன்றைய தினமே ஆரம்ப கட்ட தீர்வுகள் வழங்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.