அதிகாலையில் வீட்டுக்குள் புகுந்த இராணுவச் சிப்பாய் நையப்புடைப்பு!

பூநகரி, கரியாலை நாகபடுவான் கணேஸ்குடியிருப்பு பகுதியில் மக்கள் குடியிருப்புக்குள் புகுந்து தொந்தரவுசெய்த இராணுவச் சிப்பாய் ஒருவர் மக்களால் மடக்கிப்பிடிக்கப்பட்டு நையப்புடைக்கப்பட்டார்.

இச்சம்பவம் நேற்று (வியாழக்கிழமை) அதிகாலை இடம்பெற்றதோடு குறித்த சிப்பாய் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

இதுதொடர்பில் தெரியவருவதாவது, குறித்த குடியிருப்புப் பகுதியிலுள்ள வீடொன்றுக்குள் நேற்றைய தினம் அதிகாலை 3 மணியளவில் இராணுவச் சிப்பாய் ஒருவர் புகுந்துள்ளார். இதனை வீட்டில் இருந்தவர்கள் அவதானித்து கூச்சலிட்டு கத்தியுள்ளனர்.

இதனையடுத்து அங்கு திரண்ட அயலவர்கள் வீட்டுக்குள் புகுந்தவரை பிடித்து நையப்புடைத்துள்ளனர். இதன்போது கணேஷ் குடியிருப்புக்கு அண்மையில் உள்ள இராணுவ முகாமில் இருந்து தான் வந்ததாகவும், தான் ஒரு இராணுவச் சிப்பாய் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதனையடுத்து முழங்காவில் பொலிஸாருக்கு தகவல் கொடுக்கப்பட்டு சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் குறித்த இராணுவ சிப்பாயை கைதுசெய்துள்ளதோடு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.

இதேவேளை, மக்கள் குடியிருப்புக்குள் இராணுவ முகாம் இருப்பதால் தாங்கள் பெரும் அசௌகரியங்களை சந்தித்துவருவதாக அப்பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.

Related Posts