பொலிஸ் உத்தியோகத்தர் மற்றும் ஆயுதங்களுடன் கொடிகாமம் பொலிஸாரின் வாகனம் கடத்தப்பட்டமை தொடர்பாக நான்கு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த நால்வரும் இன்று (புதன்கிழமை) காலை கைது செய்யப்பட்டதாக கொடிகாமம் பொலிஸார் தொிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது கொடிகாமம் பாலாவி பகுதியில் நேற்று திருமண விருந்து உபசார நிகழ்வில் ஏற்பட்ட மோதலை தொடர்ந்து பொலிஸ் அவசர சேவை பிரிவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் மோதலில் ஈடுபட்டவர்களை கைது செய்ய முற்பட்ட போது அங்கிருந்தவர்களுக்கும் பொலிஸாருக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது.
அதன்போது அங்கு நின்றிறுந்த ஒருவர் பொலிஸாரின் வாகனத்தை எடுத்துச் சென்றுள்ளார். அதன்போது வாகனத்தில் பின்னிருக்கையில் இருந்த பொலிஸ் அதிகாரி வாகனத்திலிருந்து குதித்து வானத்தை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளார். ஆனால், அதனை பொருட்படுத்தாது அவர் வாகனத்துடன் தப்பிச் சென்றுள்ளார்.
பின்னர் சுமார் ஒரு கிலோமீற்றர் தொலைவில் மரமொன்றுடன் மோதி விபத்திற்குள்ளான நிலையில், பொலிஸ் வாகனத்தை அவர் விட்டுச் சென்றுள்ளார்.
இந்நிலையில், குறித்த சம்பவம் தொடர்பாக கொடிகாமம் மற்றும் கொடிகாம சாவகச்சேரியிலிருந்து மேலதிக பொலிஸார் வரவழைக்கப்பட்டு விசாரணைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன.
குறித்த பகுதியில் நேற்று இரவு முழுவதும் பெருமளவான பொலிஸார் குவிக்கப்பட்டு தேடுதல்கள் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது