இலங்கையைச் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்குக் கொண்டு வருவது தொடர்பில், ஐக்கிய நாடுகள் சபையின் கண்காணிப்புடன் கூடிய பொதுவாக்கெடுப்புக்கு அழைப்பு விடுக்க வேண்டும் என வடமாகாண சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
வட.மாகாண சபையின் 131 வது அமர்வு நேற்று (செவ்வாய்க்கிழமை) கைதடியில் அமைந்துள்ள பேரவைச் செயலகத்தில் பேரவைத் தலைவர் சீ.வி.வி.கே.சிவஞானம் தலைமையில் ஆரம்பமாகியது.
குறித்த பிரேரணையில், ‘யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட தமிழ் பேசும் மக்களின் நிலை, காணாமற்போனோர், தமிழ் அரசியற் கைதிகள், பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தொடந்தும் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
மேலும் தமிழ்ப் பிரதேசங்களில் பெருமளவிலான பாதுகாப்புப் படைகள் நிலைகொண்டுள்ளமை தொடர்பில் கண்காணிப்பதற்கு இலங்கைக்கான ஐக்கிய நாடுகளின் விசேட அறிக்கையிடும் பிரதிநிதி ஒருவரை நியமிக்க வேண்டும்.
அத்துடன், கணிசமான முன்னேற்றம் ஏற்படும் வரை இலங்கை மீது இராணுவத் தடைகளை விதிப்பதற்கு ஐ.நா பாதுகாப்புச் சபையை வலியுறுத்த வேண்டும்.
தமிழ் பேசும் மக்களுக்குரிய சமத்துவமான அரசியல் தீர்வொன்றை வழங்குவதற்கு விரும்பாமையால் கடந்தகால வன்முறையின் மீளெழுகையைத் தவிர்ப்பதன் பொருட்டு எந்தவொரு அர்த்தமுள்ள முயற்சியையும் முன்னெடுப்பதற்கு இலங்கை தவறியுள்ளது.
ஓர் நிலையான அரசியல் தீர்வைக் காண்பதை நோக்காகக் கொண்டு தமிழ் பேசும் மக்களின் அரசியல் அபிலாசையைத் தீர்மானிப்பதன் பொருட்டு இத்தீவின் வடக்கு-கிழக்குப் பிராந்தியத்தில், ஐக்கிய நாடுகள் சபையின் கண்காணிப்புடன் கூடிய பொதுவாக்கெடுப்பு ஒன்றை நடத்துமாறு ஐக்கிய நாடுகள் சபையின் உறுப்பு நாடுகளை இச்சபையானது கோருகின்றது” என்ற கோரிக்கைகளை முன்வைத்து ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இதேவேளை குறித்த பிரேரணை ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவைக்கும் மனித உரிமை ஆணையாளருக்கும் அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்படுமென்றும் அவைத்தலைவர் சபையில் அறிவித்திருந்தார்.