செம்மணியில் படுகொலை செய்யப்பட்ட கிருஷாந்தியின் 22ஆவது ஆண்டு நினைவு தினம், நாளை மறுதினம் (வெள்ளிக்கிழமை) அனுஷ்டிக்கப்படவுள்ளது.
கிருஷாந்தியுடன் சேர்த்து படுகொலை செய்யப்பட்ட ஏனையவர்களும் இதன்போது நினைவுகூரப்பட்டு அஞ்சலி செலுத்தப்படவுள்ளது.
செம்மணி படுகொலை நினைவேந்தல் குழுவின் ஏற்பாட்டில் நடைபெறும் இந்நிகழ்வில் 50 பாடசாலை மாணவர்களுக்கு புத்தகப் பைகள் வழங்கப்படவுள்ளன.
இந்நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாணசபை உறுப்பினர்கள், உள்ளூராட்சிமன்ற உறுப்பினர்கள், பாடசாலை மாணவர்கள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொள்ளவுள்ளனர்.
கடந்த 1996ஆம் ஆண்டு செப்டெம்பர் 7ஆம் திகதி க.பொ.த. உயர்தர பரீட்சை எழுதிவிட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்த கிருஷாந்தி, இராணுவத்தால் கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். கிருஷாந்தியை தேடிச் சென்ற பெற்றோர் உள்ளிட்ட உறவினர்கள் மற்றும் அயல்வீட்டாரும் படுகொலை செய்யப்பட்டு செம்மணி பகுதியில் புதைக்கப்பட்டமை பின் நாட்களில் கண்டுபிடிக்கப்பட்டது.
இதுகுறித்து இராணுவ சிப்பாய்கள் சிலர் கைதுசெய்யப்பட்டு, ஒருவருக்கு தூக்குத்தண்டனை விதிக்கப்பட்டது. எனினும், இச்சம்பவத்துடன் தொடர்புடைய ஏனைய இராணுவ சிப்பாய்கள் தொடர்பில் எவ்வித நடவடிக்கையும் எடுக்காத அதேவேளை, வழக்கும் கிடப்பில் போடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.