கிளிநொச்சியில் படுகொலை செய்யப்பட்ட முறிகண்டி பகுதியை சேர்ந்த கருப்பையா நித்தியகலா என்ற யுவதியின் உடல் நேற்று (வெள்ளிக்கிழமை) நல்லடக்கம் செய்யப்பட்டது.
முறிகண்டி பகுதியில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் இறுதி வழிபாடு இடம்பெற்றதை அடுத்து அன்னாரின் பூத உடல் முறிகண்டி சேம காலைக்கு எடுத்து செல்லப்பட்டு பிற்பகல் 3 மணியளவில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
குறித்த யுவதியின் உடலிற்கு அரசியல்வாதிகள், பொதுமக்கள் எனப் பலரும் அஞ்சலி செலுத்தியிருந்ததுடன், குறித்த யுவதியின் கொலைக்கு நீதி வேண்டி பல போராட்டங்களும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, கிளிநொச்சியில் இடம்பெற்ற இக்கொலை தொடர்பில் கிளிநொச்சி பொலிஸ் பெரும் குற்றப்பிரிவு விசேட குழுவினரால் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவர் அதே ஆடைத் தொழிற்சாலையில் பணியாற்றுகின்ற தனியார் பாதுகாப்பு நிறுவனத்தின் நிலையப் பொறுப்பதிகாரி என்பதுடன், இவர் கிளிநொச்சி விநாயகபுரத்தைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான கிருஸ்ணகீதன் எனத் தெரிய வந்துள்ளதாக கிளிநொச்சிப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொலிஸார் கொலையுண்ட பெண்ணின் தொலைபேசியினைச் சோதனை செய்தபோது குறித்த பாதுகாப்பு உத்தியோகத்தரின் தொலைபேசியில் இருந்தே இறுதியாக அழைப்பு எடுக்கப்பட்டுள்ளதுடன், தொலைபேசியில் இவருடனே அப்பெண் அதிகளவாக தொடர்பில் இருந்துள்ளமையும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளைக் கிளிநொச்சிப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.