வலி.தெற்கு பிரதேச சபை தவிசாளரின் வாகனம் சுன்னாகம் பகுதியில் விபத்துக்கு உள்ளாகியுள்ளது. குறித்த விபத்து சம்பவம் தொடர்பில் உரிய விசாரணைகளை முன்னெடுக்காது சுன்னாக காவற்துறையினர் செயற்பட்டதாக அப்பகுதியில் நின்றவர்கள் தெரிவித்தனர்.
சுன்னாகம் சந்தியில் நேற்று வியாழக்கிழமை (30.08.18) குறித்த விபத்து சம்பவம் ஏற்பட்டு உள்ளது. அது குறித்து விபத்தினை நேரில் பார்த்தவர்கள் தெரிவிக்கையில் ,
தவிசாளரின் வாகனத்தில் தவிசாளர் இல்லாத நிலையில் அதன் சாரதி செலுத்தி வந்த போது சந்தியில் தனியாருக்கு சொந்தமான மற்றுமொரு வாகனத்துடன் விபத்துக்கு உள்ளானது. விபத்தினை அடுத்து தவிசாளரின் வாகனத்தில் இருந்து இறங்கிய அதன் சாரதி மது போதையில் காணப்பட்டார். அத்துடன் அவர் இறங்கும் போது வாகனத்தில் இருந்த சில மதுபான போத்தல்கள் கீழே விழுந்து உடைந்தன.
சம்பவம் இடம்பெற்று ஒரு சில நிமிடங்களில் சம்பவ இடத்திற்கு சுன்னாக காவற்துறை நிலைய பொறுப்பதிகாரி மற்றும் காவற்துறையினர் எவ்வித விசாரணைகளையும் மேற்கொள்ளாது தவிசாளரின் வாகனத்தையும், அதன் சாரதியையும் அவ்விடத்தில் இருந்து வெளியேற்றிய பின்னர் குறித்த வாகனத்துடன் விபத்துக்கு உள்ளான தனியாரின் வாகனத்தை காவற்துறை நிலையத்திற்கு கொண்டு சென்றதுடன், அதன் சாரதியையும் கைது செய்தனர்.
அதன் போது சம்பவ இடத்தில் நின்ற பொதுமக்கள் பொலிசாரின் இந்த செயற்பாடுகளுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த போது, பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி அவர்களை தகாத வார்த்தைகளால் பேசி அச்சுறுத்தி உங்கள் கதையை நீதிமன்றில் வந்து சொல்லுங்கள் என கடும் தொனியில் கூறியிருந்தார். அதேவேளை சம்பவ இடத்திற்கு வந்த காவற்துறை அதிகாரியின் மீதும் மதுபான வாடை வீசியதாகவும் அங்கிருந்தவர்கள் தெரிவித்தனர்.
வலி. தெற்கு தவிசாளர் தர்சனின் பிறந்த நாள் நேற்று வியாழக்கிழமை வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டதாகவும், அதன் போது மது விருந்தும் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்ததாகவும் , அதன் போது மது அருந்திய தர்சனின் சாரதி, பின்னர் சுன்னாக பகுதியில் உள்ள கடையில் பொருட்களை கொள்வனவு செய்ய சென்ற போதே குறித்த விபத்து ஏற்பட்டதாகவும் , விபத்து சம்பவத்தை கேள்வியுற்றவுடன் தர்சன் சுன்னாக காவற்துறை நிலைய பொறுப்பதிகாரி தகவல் வழங்கியதை அடுத்தே பொறுப்பதிகாரி சம்பவ இடத்திற்கு சென்று தர்சனின் வாகனத்தையும் சாரதியையும் மீட்டு அனுப்பியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.