யாழ் மாவட்ட பாதிக்கப்பட்ட பட்டதாரிகளை மிரட்டும் அரச அதிகாரிகள்!!

மாவட்ட செயலகங்களில் கடந்த பட்டதாரி பயிலுனர் நேர்முகத்தேர்வில் தகவலறியும் சட்டமூலத்தின் ஊடாக தாம் பெற்ற புள்ளி பட்டியலை தத்தமது மாவட்ட செயலகத்தில் பாதிக்கப்பட்ட வேலையற்ற பட்டதாரிகள் பெற்று வரும் நிலையில் யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் குறித்த சட்டமூலத்தின் ஊடாக தத்தமது பெறுபேறுகளை அறிய முடியாது இருப்பதாகவும் அதற்கான பொறுப்பு வாய்ந்த அதிகாரி தமது விண்ணப்பத்தை ஏற்கமறுப்பதாகவும் பாதிக்கப்பட்ட பட்டதாரிகள் விசனம் தெரிவித்துள்ளனர்.

தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அமைச்சினால் நாடளாவிய ரீதியில் 4053 தெரிவு செய்யப்பட்ட நிலையில் யாழ் மாவட்டத்திற்கென அபிவிருத்தி உத்தியோகத்தர்களிற்கான பட்டதாரி பயிலுனர் நேர்முகத் தெரிவில் 334 பேர் மாத்திரம் தெரிவு செய்யப்பட்டிருந்தனர்.

ஆனால் தகுதி வாய்ந்த யாழ் மாவட்ட பட்டதாரிகள் இத்தெரிவு முறையில் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு ஒன்றை செய்திருந்தனர்.

இந் நிலையில் குறித்த நேர்முகத் தேர்வில் தத்தமது திருப்திக்காக தாம் எவ்வாறான புள்ளிகளை பெற்றுள்ளோம் என்பதை அறிய யாழ் மாவட்ட தகவல் தரும் அதிகாரியை சந்தித்து தகவலறியும் சட்டமூல விண்ணப்பபடிவத்தை நிரப்பி தகுதி வாய்ந்த அதிகாரியிடம் வழங்கும் போது குறித்த அதிகாரி ஏற்க மறுப்பதாக குற்றம் சாட்டுகின்றனர்.

ஆனால் வட கிழக்கில் உள்ள இதர மாவட்ட செயலகத்தில் ஏனைய பாதிக்கப்பட்ட பட்டதாரிகள் தகவலறியும் சட்டமூலத்தின் ஊடாக விண்ணப்பத்தை சமர்ப்பித்து தத்தமது நேர்முகத்தேர்வு புள்ளிகளை பெற்றுள்ளனர்.

எனினும் யாழ் மாவட்ட செயலகம் மாத்திரம் இவ்விடயத்தில் தம்மை ஏமாற்ற முயல்வது தமது அடிப்படை உரிமைகளை மீறும் செயலாகும் என பாதிக்கப்பட்ட பட்டதாரிகள் குறிப்பிட்டனர்.

இதில் குறித்த தகவல் அறியும் அதிகாரி பட்டதாரிகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறையிட்டது தொடர்பில் பட்தாரிகளிடம் கடிந்துகொண்டதாகவும் தெரியவந்துள்ளது.

Related Posts