சரவணபவன் எம்.பி மற்றும் உதயன் பத்திரிகை ஆசிரியர் மீதுதாக்குதல்!

யாழ் பல்கலைக்கழக பகுதிக்கு சென்ற நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் மற்றும் உதயன் பத்திரிகையின் நிறைவேற்று ஆசிரியர் ரீ.பிரேமானந்த் ஆகியோர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.இது தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதுடன், இந்த தாக்குதலை இராணுவத்தினரே மேற்கொண்டதாகவும் முறைப்பாட்டில் பதிவு செய்துள்ளதாக சரவணபவன் எம்.பி  தெரிவித்தார்.

மாலை 06.05 மணிக்கு பல்கலைக்கழகத்தின் பாலசிங்கம் விடுதி, ஆனந்தக்குமாரசுவாமி விடுதி ஆகியவற்றில் அதிரடியாக ஆயுதங்களுடனும் கொட்டன் தடிகளுடனும் ஆண்கள் விடுதியினுள் புகுந்த இராணுவத்தினர் கையில் அகப்பட்டோர் மீது கண்மூடித்தனமாகத் தாக்கத் தொடங்கினர்.

இவ்வேளையில் தனது நிழற்பட கருவியில் படமெடுத்துக்கொண்டிருந்த உதயன் பத்திரிகை ஆசிரியரை இராணுவப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரி ஒருவர் கடுமையாகத் தாக்கியிருக்கின்றார். அவரிடமிருந்த நிழற்பட கருவியைப் பறிப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதும், அவர்களது முயற்சி கை கூடவில்லை.

முகத்தைக் கறுப்புத் துணியினால் கட்டியபடி வந்த இருவர் ஊடகவியலாளரைத் தாக்கி விட்டுக் கமெராவை பறித்துக்கொண்டு ஓட முற்பட்ட போதும் முயற்சி பலனளிக்க வில்லை. ஆத்திரமடைந்த புலனாய்வாளர்கள் நாடாளுமன்ற உறுப்பினரை நோக்கி கற்களால் தாக்கினர். நாடாளுமன்ற உறுப்பினரின் பாதுகாப்புப் பிரிவினரும் ஏனையவர்களுமாக அவரைச் சூழ்ந்து கொண்டு பாதுகாப்பாக வாகனத்துக்குள் கூட்டிவந்தனர்.

இவ்வேளையில் மாணவர்களிடமிருந்து வந்த தொலைபேசி மூலம் தகவலறிந்து உதயன் ஆசிரியர் மற்றும் உதயனின் நிர்வாக இயக்குநரும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் நாடளுமன்ற உறுப்பினருமாகிய ஈ.சரவணபவன் மற்றும் ஊடகவியலாளர்கள் பாலசிங்கம் விடுதிக்கு விரைந்தனர்.

Related Posts