“சிகரெட் உள்ளிட்ட புகைப்பொருள்களின் பயன்பாட்டை முற்றிலும் ஒழிக்கும் விதமாக அரசு எடுத்த நடவடிக்கை காரணமாக நாட்டின் 107 நகரங்களில் (கிராம மட்ட நகரங்கள்) அவற்றின் விற்பனை நிறுத்தப்பட்டுள்ளது. அதில் யாழ்ப்பாண மாவட்டத்திலேயே அதிகமாக 22 நகரங்களில் புகையிலைப் பொருள்களின் விற்பனை நிறுத்தப்பட்டுள்ளது” என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் புகையிலைப் பொருள்களின் பயன்பாட்டுக்கு முற்றிலும் தடை விதிக்கும் விதமாக பொதுச் சுகாதார உத்தியோகத்தர்கள் ஊடாக முன்னெடுக்கப்பட்ட விழிப்பூட்டல் செயற்றிட்டத்தின் மூலம் இந்த முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
முதல்கட்டமாக 107 நகரங்களில் சிகரெட் உள்ளிட்ட புகையிலைப் பொருள்களின் விற்பனை கடந்த செவ்வாய்கிழமை முதல் முற்றாக நிறுத்தப்பட்டுள்ளன.
இதற்கு பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் தரப்பில் இருந்தும் முழு ஒத்துழைப்பு வழங்கப்பட்டுள்ளது என சுகாதார அமைச்சர் ராஜித சேனரத்ன தெரிவித்தார்.
மேலும் 2019ஆம் ஆண்டுக்குள் இதனை 200 நகரங்களாக விரிவுபடுத்துவதுதான் தனது இலக்கு என்றும் அவர் கூறினார்.
தற்போது, யாழ்ப்பாணத்தில் 22 நகரங்கள், மாத்தறையில் 17 நகரங்கள், குருணாகலில் 16 நகரங்கள் உள்ளிட்ட மொத்தமுள்ள அனைத்து மாவட்டங்களைச் சேர்த்து 107 நகரங்கள் இந்த முயற்சியில் களமிறங்கியுள்ளன.
அதுமட்டுமல்லாமல் புகையிலைப் பொருள்கள் மீதான வரி 90 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளது. புகையிலைப் பொருள்கள் மீது 80 சதவீத அளவுக்கு அதன் தீமையை விளக்கும் விதமாக வாசகங்கள் மற்றும் ஒளிப்படங்கள் அமைய வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
பாடசாலை மற்றும் பொது இடங்களில் இருந்து 100 மீற்றர் சுற்றளவில் விற்பனை செய்யவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும் 2020ஆம் ஆண்டுக்குள் நாடு முழுவதும் புகையிலை உற்பத்திக்கு நிரந்தர தடை விதிப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது என்று சுகாதார அமைச்சுக் குறிப்பிட்டுள்ளது.