Ad Widget

யாழ் நீர்வேலி வாள்வெட்டு: இரு இளைஞர்களுக்கு விளக்கமறியல்!

நீர்வேலி பிள்ளையார் கோவிலில் வைத்து இருவர் மீது வாள்வெட்டுத் தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இருவரையும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

நீர்வேலி செம்பாட்டுப் பிள்ளையார் கோவில் வைத்து கடந்த மே 7ஆம் திகதி இளைஞர்கள் இருவர் மீது வாள்வெட்டு தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டுவந்த பொலிஸார் 24 மற்றும் 28 வயதுடைய இருவரை நேற்று (செவ்வாய்க்கிழமை) கைது செய்துள்ளனர்.

இதன் பின்னர் இருவரும், யாழ்ப்பாணம் நீதிமன்ற மேலதிக நீதிவான் வி.இராமகமலன் முன்னிலையில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது, சந்தேகநபர்களை எதிர்வரும் 23 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க மேலதிக நீதிவான் உத்தரவிட்டார்.

இந்தச் சம்பவத்தில் அதே இடத்தைச் சேர்ந்த 23 வயதுடைய அப்புத்துரை கிரிசன் மற்றும் இளைஞனும் படுகாயமடைந்தனர்.

இந்நிலையில் பொலிஸாரல் தேடப்பட்டுவரும் வாள்வெட்டு குழுவின் முக்கியஸ்தர் வினோத் உள்ளிட்ட 8 பேர் கொண்ட கும்பலே இந்த வாள்வெட்டுத் தாக்குதலை மேற்கொண்டது என பொலிஸார் தெரிவித்திருந்தனர்.

இந்த நிலையில் இணுவிலைச் சேர்ந்த இளைஞர்கள் மூவர் கோப்பாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர். அவர்கள் மூவரும் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் அடையாள அணிவகுப்புக்கு உட்படுத்தப்பட்ட போதும், சாட்சிகள் அடையாளம் காட்டவில்லை. மேலும் இருவர் பின்னர் கைது செய்யப்பட்டனர்.

சந்தேகநபர்கள் ஒரு மாத காலத்துக்கு மேலாக விளக்கமறியலில் வைக்கப்பட்ட பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்ட நிலையில், வேறு இருவர் இன்று கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

Related Posts