வட மாகாண அமைச்சர்கள் அனைவரும் பதவி விலக வேண்டும் – ஆளுனர் ரெஜினோல்ட் குரே

வட மாகாண அமைச்சர்கள் அனைவரும் பதவி விலக வேண்டும் என்று வடக்கு ஆளுனர் ரெஜினோல்ட் குரே வலியுறுத்தியுள்ளார்.

அதன் ஊடாகவே தற்போது வட மாகாண அமைச்சர்கள் சபையில் நிலவுகின்ற சிக்கலான நிலைமைக்கு இலகுவாக தீர்வு காண முடியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் இடைக்கால தடை உத்தரவின் ஊடாக பா.டெனீஸ்வரனும் அமைச்சர் என்றே கருதப்படுகிறார்.

இதனால் மாகாண சபைகளுக்கு 5 அமைச்சர்களே இருக்க முடியும் என்ற சூழ்நிலையில் தற்போது ஆறு அமைச்சர்கள் உள்ளனர்.

எனினும் தற்போதுள்ள அமைச்சர்கள் அனைவரும் பதவி விலகச் செய்து, புதிதாக அமைச்சர்களை முதலமைச்சர் பரிந்துரை செய்தால், புதிய அமைச்சர்கள் சபைக்கு தம்மால் அங்கீகாரம் வழங்க முடியும்.

ஆனால் அங்குள்ள அமைச்சர்கள் தங்களது சுயகௌரவத்தை பாதுகாத்துக் கொள்ளும் நோக்கில் பதவி விலக மறுப்பதாகவும், நெகிழ்வுத் தன்மை இல்லாது செயற்படுவதாகவும் ஆளுனர் குறிப்பிட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் குருநகர் பகுதியில் உள்ள உயர் தொழில்நுட்ப நிறுவகத்துக்கு விஜயம் செய்து ஆற்றிய உரையில் ஆளுனர் ரெஜினோல்ட் குரே இந்த கருத்தை வெளியிட்டுள்ளார்.

Related Posts