எம்மை அடக்கி ஆள வேண்டும் என எண்ணுகின்ற பெரும்பான்மைச் சமூகத்தினரும் மிக விரைவில் எம்முடன் சேர்ந்து போராட வேண்டிய தேவை ஏற்படும் என வட.மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.
முல்லைத்தீவில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற பால் பதனிடும் தொழிற்சாலையின் திறப்பு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
“எம்மை அடக்கி ஆள வேண்டும் என எண்ணுகின்ற பெரும்பான்மைச் சமூகத்தினர் எம்மையும் தமது சகோதரர்களாக அணைத்துக் கொண்டு வெளிநாட்டுச் சக்திகளிடமிருந்து இலங்கையையும் அதன் உள்ளக வளங்களையும் பாதுகாப்பதற்குச் சேர்ந்து போராட வேண்டிய ஒரு சூழ்நிலை ஏற்படப்போகின்றது என்பதை உணர்கின்றேன்.
தெற்கில் 15000 ஏக்கர் காணி பிறிதொரு நாட்டுக்குத் தாரைவார்த்துக் கொடுத்துள்ளமை உங்கள் அனைவருக்கும் தெரியும். அதனால் தான் நான் இப்போதிருந்தே எமது நிலங்கள் பாதுகாக்கப்படல் வேண்டும் என வலியுறுத்தி வருகின்றேன்.
மேலும் எமது விவசாய முயற்சிகள் தடைகளின்றி மேற்கொள்ளப்படல் வேண்டும், கடல் வளங்கள் ஏனையவர்களின் சுரண்டுகைகளுக்கு உட்படாது பாதுகாக்கப்படல் வேண்டும்.
எமது சுற்றுலா மையங்கள் வட.மாகாண சபையின் நேரடிக் கண்காணிப்பில் விருத்தி செய்யப்படல் வேண்டும், இவைகளின் மூலம் கிடைக்கப் பெறுகின்ற நிதிகள் எமது மக்களின் வாழ்வாதார மேம்பாட்டிற்கு பயன்பட வேண்டுமென மீண்டும் மீண்டும் அழுத்தம் கொடுத்து வருகின்றேன்.
ஆனால் அன்றன்றைக்குத் தமக்கு அனுசரணைகள் கிடைத்தால் போதும் என்று எண்ணும் எம்மவர்கள் தூரநோக்கற்று சிந்தித்து வருகின்றார்கள்.
எமது பௌதீகப் பலம் எமது இயற்கைச் சூழலே. அது பறிபோய்விட்டால் நாம் வீழ்ந்து விடுவோம். இதை நாம் மனதில் ஆழமாய்ப் பதித்து வைத்திருக்க வேண்டும்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.