நாளையதினம் வடக்கில் வைத்திய சேவைகள் முடக்கம்?

யாழ். போதனா வைத்தியசாலை நீங்கலாக யாழ்.மாவட்ட சுகாதார சேவைகள் பிராந்தியத்திற்குட்பட்ட அனைத்து வைத்தியசாலைகளிலும் பணிப்புறக்கணிப்பு போராட்டம் மேற்கொள்ளப்படவுள்ளதாக வட மாகாண அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

வட மாகாணத்தில் உள்ள அனைத்து மக்களுக்கும் தெல்லிப்பளை வைத்தியசாலையின் புற்றுநோய்ப்பிரிவு சேவையாற்றி வருகின்றது. குறித்த வைத்தியசாலையில் தேவையான 18 வைத்தியர்களில் 9 வைத்தியர்கள் மட்டும் கடமையாற்றுகிறார்கள்.

அங்கு நீண்ட காலம் சேவையில் உள்ளவர்களுக்கும் உரிய காலப்பகுதிக்குள் இடமாற்றம் வழங்கப்படுவதில்லை. இதனால் அங்கு வைத்தியர்கள் பற்றாக்குறை நீண்ட காலமாக நிலவி வருகின்றது. இது மோசமான நிலையாகும்.
இது தொடர்பில் உரிய அதிகாரிகளுக்கும், அமைச்சுக்கும் அறிவித்தும் இதுவரை ஆக்கபூர்வமான நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனினும் இதுவரை நோயாளர்களுக்கு எந்தவிதமான பாதிப்புக்களும் ஏற்படாதவாறு அங்குள்ள சொற்ப வைத்தியர்களால் சேவை வழங்கப்படுகின்றது.

இந்த நிலையில் வைத்தியசாலையில் நிலவும் வைத்தியர்கள் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படாததால் நாளை வேலை நிறுத்தப் போராட்டமொன்றினை நடத்த முடிவு செய்துள்ளோம்.

இந்த வேலை நிறுத்தப் போராட்டம் யாழ். போதனா வைத்தியசாலை நீங்கலாக யாழ். மாவட்ட சுகாதார சேவைகள் பிராந்தியத்திற்குட்பட்ட அனைத்து வைத்தியசாலைகளிலும் மேற்கொள்ளப்படும். இந்தப் போராட்டத்திற்கு உரிய பலன் கிடைக்காவிட்டால் மேலதிக நடவடிக்கைளையும் செய்வதற்கு தீர்மானித்துள்ளோம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த பணிப்புறக்கணிப்பு போராட்டத்தால் நாளை யாழில் பெரும்பாலான மக்கள் வைத்திய சேவைகளை பெற்றுக் கொள்வதில் நெருக்கடிகளை எதிர்நோக்கலாம் என சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

Related Posts