அரசாங்கத்தின் பங்காளிகளுக்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவி வழங்க முடியாது: சுமந்திரன்

அமைச்சரவையில் அங்கம் வகித்துக்கொண்டு அரசாங்கத்தின் பங்காளியாக உள்ள ஒரு கட்சிக்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவியை வழங்க முடியாதென தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் அதன் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவர் பதவியை தமக்கு வழங்குமாறு மஹிந்த அணியினர் நேற்று (செவ்வாய்க்கிழமை) நாடாளுமன்றில் கடுமையாக வாதிட்டுள்ளனர்.

இதன்போது குறுக்கிட்டு பதிலளித்த சுமந்திரன், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சியான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தேசிய அரசாங்கத்தில் அங்கம் வகிக்கின்றது. அவ்வாறான நிலையில், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பிற்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவியை வழங்குவதை எவ்வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாதென குறிப்பிட்டுள்ளார்.

எனினும், மைத்திரி அரசாங்கம் பதவியேற்று 100 நாட்களை கொண்ட ஆட்சி அமைக்கப்பட்டபோது, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை சேர்ந்த நிமல் சிறிபால டி சில்வா எதிர்க்கட்சித் தலைவராக பதவி வகித்தார். அவ்வாறு வழங்கமுடியுமாக இருந்தால் தற்போது ஏன் வழங்க முடியாதென தினேஸ் குணவர்தன கேள்வியெழுப்பியுள்ளார்.

இவ்வாறு நாடாளுமன்ற கூட்டத்தொடர் ஆரம்பிக்கப்பட்ட நேரம் முதல் உறுப்பினர்களுக்கு இடையில் கடும் வாதப் பிரதிவாதங்கள் இடம்பெற்றுள்ளன.

இந்நிலையில், கட்சித் தலைவர்கள் கூட்டத்தின் பின்னர் சபாநாயகர் முக்கிய அறிவிப்பை வெளியிடுவாரென எதிர்பார்க்கப்படுகிறது.

எவ்வாறாயினும் எதிர்க்கட்சித் தலைவர் பதவியில் மாற்றத்தை ஏற்படுத்தப் போவதில்லையென, ஜனாதிபதியுடன் நேற்று இடம்பெற்ற சந்திப்பின்போது தீர்மானம் எடுக்கப்பட்டதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.

Related Posts