வலிகாமம் கிழக்கு பகுதியில் பாதீனிய ஒழிப்பு முயற்சிகளுக்காக பிரதேச சபையும், யாழ்ப்பாண பல்கலைக்கழக திட்டமிடல் சமூகமும் இணைந்து செயற்பட ஆரம்பித்துள்ளன.
இதன் முதல்கட்ட முயற்சியாக நேற்று(திங்கட்கிழமை) புத்தூர் நிலாவரை பகுதியில் அதிகளவான பாதீனிய செடிகள் அகற்றப்பட்டு அழிக்கப்பட்டுள்ளன.
வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் எல்லைக்குள் அதிகளவான பொது இடங்களில் பாதீனிய செடியின் பரம்பல் அதிகரித்துக் காணப்படுகின்றது.
இதனை அகற்றுவதற்கான முயற்சியாக வலிகாமம் கிழக்குப் பிரதேச சபை தவிசாளர் தியாகராஜா நிரோஷ், யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் திட்டமிடல் மாணவர் சமூகத்தின் உதவியினை அந்த சமூகத்தின் பெரும் பொருளாளரும், விரிவுரையாளருமான பிரதிபராஜா ஊடாக நாடியிருந்தார்.
இந்த நிலையில் வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் எல்லைக்குள் காணப்படும் பாதீனிய ஒழிப்பினை முன்னெடுப்பதற்கு மாணவர்களும் விருப்பம் தெரிவித்திருந்தனர்.
இதனைத் தொடர்ந்து பீடாதிபதிகள், யாழ் பல்கலைக்கழக துணைவேந்தர் ஆகியோரின் அனுமதியுடன் குறித்த செயற்றிட்டத்தில் மாணவர்கள் பங்கெடுத்திருந்தனர்.
அத்துடன், குறித்த செயற்றிட்டத்தினை எதிர்காலத்தில் தொடர்ந்தும் முன்னெடுப்பதற்கான முயற்சிகளையும் வலிகாமம் கிழக்குப் பிரதேச சபையின் தவிசாளரும், யாழ்பல்கலைக்கழக திட்டமிடல் சமூகமும் முன்னெடுக்கவுள்ளன.