இனப்பிரச்சனைக்கு தீர்வினை காணப்பதற்கு முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா கோரிக்கை விடுத்துள்ளார்.
தேசிய ஒருமைப்பாட்டிற்கும், நல்லிணத்திற்குமான அலுவலகம் வடக்கில் முன்னெடுக்கும் செயற்திட்டங்கள் மற்றும் புதிய கடன் திட்டங்கள் தொடர்பிலான கலந்துரையாடல் நேற்று(வியாழக்கிழமை) யாழ் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.
இந்த கலந்துரையாடலில் கருத்து வெளியிடும் போதே தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளார்.
இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், ‘தேசிய ஒருமைப்பாட்டிற்கும் நல்லிணக்கத்திற்குமான அமைச்சின் ஊடாக பல்வேறு திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அதிலும் தற்போது முன்னெடுக்கப்படவுள்ள கடன் திட்டங்கள் எமது மக்களுக்கு பல்வேறு நன்மைகளை பெற்றுத்தரும் என நம்புகின்றோம்.
ஆகவே இந்த கடன் திட்டங்கள் முழுமையாக மக்களை சென்றடைய கூடியதாகவும் அதனை மக்கள் பெற்றுக் கொள்ளக் கூடியதான வழி வகைகளையும் அதிகாரிகள் மேற்கொள்ளவேண்டும்.
புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததன் பின்னர் கடந்த 3 ஆண்டுகளாக இத்தகைய திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகின்றது. ஆனால் இனி வரும் காலங்களிலும் தொடர்ந்தும் இவ்வாறான செயற்பாடுகளை முன்னெடுக்க முடியுமா என்பது கேள்விக் குறியாகவே காணப்படுகின்றது.
இதேவேளை, அரசாங்கம் இவ்வாறான சில உதவி திட்டங்களை வழங்கும் செயற்பாடுகளை முன்னெடுத்தாலும், தமிழ் மக்களது இனப்பிரச்சனைக்கு நிரந்தரமானதொரு தீர்வை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்பதே எங்களதும் எமது மக்களதும் கோரிக்கையாக இருக்கின்றது’ என தெரிவித்துள்ளார்.